மாணவிக்காக போராட்டம்: கைதான மாணவர் சங்க தலைவர்களை விடுவிக்க ஏபிவிபி வலியுறுத்தல்

சென்னை: பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவிக்கு நீதி கேட்டு போராடிய அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஏபிவிபி-யின் வட தமிழக மாநில இணை செயலாளர் வேதாஞ்சலி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்காக அரசு தரப்பிலிருந்து எவ்வித ஆதரவும் இல்லை.

திமுக அரசின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து தமிழகத்தில் சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு ஏபிவிபி-யினர் சாலைகளில் இறங்கி போராட்டம் செய்தனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் நேற்று(டிச. 26) திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய ஏபிவிபி வட தமிழகத்தின் மாநில செயலாளர் யுவராஜ் தாமோதரன் உட்பட மாணவர்களை, ஏபிவிபி மாநில அலுவலகத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் 20-கும் மேற்பட்ட காவல்துறையினர் தேச விரோதிகளை கைது செய்வதை போல கைது செய்துள்ளனர். காவல் துறையினரின் இந்த அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீதி கேட்டு போராடும் மக்களின் குறிப்பாக மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் பேசுவதற்கு சுதந்திரம் இல்லாமல், தங்கள் கருத்தை தெரிவிப்பதற்கு சுதந்திரம் இல்லாமல் தமிழகம் சர்வாதிகார ஆட்சியாக மாறி வருவதை ஏபிவிபி வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை காப்பாற்றும் நோக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட்டிருப்பது இந்த அரசின் மெத்தன போக்கைக் காட்டுகிறது.

அதோடு, திமுகவினர் ஏதேனும் குற்றம் செய்தால் அவர்களை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கையாகவே தெரிகிறது. ஏபிவிபி அமைப்பு இத்தகைய மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் ஒரு காலமும் அஞ்சாது. நீதி கேட்டு போராடியதால் கைது செய்யப்பட்ட ஏபிவிபி மாநில செயலாளர் மற்றும் மாணவ தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லாமல் நீதி கிடைக்கும் வரையில் ஏபிவிபி-யின் போராட்டம் தொடரும். இதனைத் தவறும் பட்சத்தில் மாணவிக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.