லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்தவர் சபீக். இவருக்கு 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி சுலேகா(வயது 20), ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால் இதனை கணவர் சபீக் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.
இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுலேகா ரீல்ஸ் விடியோ எடுப்பதை நிறுத்தவில்லை. நேற்றைய தினம் இரவு உணவு சமைப்பதற்கு பதிலாக சுலேகா ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட சபீக், மனைவி சுலேகாவை திட்டியதால், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சபீக் தூங்க சென்றுவிட்டார்.
இந்நிலையில், இன்று காலை எழுந்தபோது சுலேகா வீட்டில் இல்லாததைக் கண்டு சபீக் அதிர்ச்சியடைந்துள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இதனிடையே, சபீக்கின் வீட்டில் இருந்து சுமார் 1.5 கி.மீ. தூரத்தில் உள்ள மஹோபா-கஜுராகோ ரெயில்வே வழித்தடத்தில், தண்டவாளத்தின் அருகே ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது சுலேகாவின் உடல் என்பது தெரியவந்தது. இதனை அவரது கணவர் சபீக் உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து சுலேகாவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சுலேகா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.