பிக்பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் ரவீந்தர், அர்னவ், சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அருண் உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. சில வாரங்களுக்குப் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ராணவ், ரயான், வர்ஷினி வெங்கட் உள்ளிட்ட மேலும் 6 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் நுழைந்தனர்.
மொத்தம் 24 போட்டியாளர்களில் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மிச்சமிருக்கும் 12 போட்டியாளர்களும் டைட்டிலை நோக்கிய பயணத்தில் இருக்க, நிகழ்ச்சி கடைசிக்கட்ட விறுவிறுப்புடன் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது போட்டியாளர்கள் அவர்கள் குடும்பத்தினரைச் சந்திக்கும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று முன் தினம் சிவகங்கை மாவட்டம் கல்லலில் இருந்து தன் மனைவியுடன் கிளம்பி சென்னை வந்திருந்தார் முத்துக்குமரனின் அப்பா ஜெகதீசன்.
பிக்பாஸ் வீட்டுக்குச் சென்று திரும்பிய ஜெகதீசனிடம் பேசினோம்.
”பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு என எனக்கு ரெட்டைக் குழந்தைகள். இவன் சின்னப்புள்ளையா இருந்தப்பெல்லாம் குடும்பப் பொருளாதார சூழல் காரணமாக என்னால் அவன் பக்கத்துல இருக்க முடியல. குடும்பத்தை இங்க விட்டுட்டு மலேசியா, சிங்கப்பூர்னு வெளிநாடுகளில் நான் இருந்தேன். அங்க கோவில்களில் பூஜை செய்கிற வேலை.
நானும் என் மனைவியும் அதிகம் படிக்கல. அதனால் பசங்களைப் பெரிசா படிக்க வெச்சிடணும்னு ஆசைப்பட்டோம். அவன் இன்ஜினியரிங் படிச்சிருக்கான். ஸ்கூல் படிக்கிறப்பவே ஒரு பேச்சு போட்டி கூட விட மாட்டான். மீடியா வேலை அவன் தேர்ந்தெடுத்ததுதான். குடும்ப நிலைமை தெரிஞ்சு வளர்ந்தவன்கிறதால அவன் எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும். அதனால் நானும் ஏதும் கேட்கிறதில்லை.
சென்னை வந்து அவனாகவே முட்டி மோதி தான் இன்னைக்கு ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கான்.
இந்த நிகழ்ச்சியை இதுக்கு முன்னாடி நான் பாத்திருக்கேன். ஆனா அந்த வீட்டுக்குள் இருக்கிறவங்க நடிக்குறாங்க, நடிக்க அவங்களுக்குச் சொல்லிக் கொடுப்பாங்கன்னு பேசறதைப் பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. என் பையன் வீட்டுல எப்படி இருப்பானோ அதேபோலத்தான் அங்கயும் இருக்கான். அடிப்படையிலேயே எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான். யாரைப் பத்தியும் தப்பா பேச மாட்டான். அதனால் அவன் நிச்சயம் இந்த ஷோவுல ஜெயிச்சு டைட்டில் வாங்குவான்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.
எங்க ஊர்ல எல்லாரும் ‘உன் பையன் நல்லா விளையாடுறான்ப்பா’னு சொல்றைத் கேக்குறப்ப ரொம்ப பெருமையா இருக்கு. அப்பெல்லாம், ‘பையன் நமக்குப் பேர் வாங்கித் தந்துட்டான். ஆனா நாமதான் அவனுடைய பால்ய பருவங்கள்ல கிட்ட இருக்காம அவனை ஏங்க வச்சிருக்கோம்’கிற நினைப்பு வந்து குற்ற் உணர்ச்சிக்கு ஆளாகிடுறேன்’ என்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…