அமெரிக்காவில் திருடிய குழந்தை இயேசு சிலையை, திருடிய நபர் மன்னிப்பு வேண்டும் குறிப்புடன் மீண்டும் வைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் கொலரோட மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது கிறிஸ்துமஸ் (Christmas) விழாவையொட்டி கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி குறித்து சிலைகளுடன் குடில் அமைத்து கொண்டாடுவது வழக்கம்.
அப்படி அமைக்கப்பட்ட குடிலிலிருந்து டிசம்பர் 17-ம் தேதி குழந்தை இயேசு சிலையை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.
தற்போது மன்னிப்பு குறிப்புடன் சிலையை மீண்டும் வைத்துள்ளார். அவரது குறிப்பில், “என்னை மன்னித்து விடுங்கள். நான் அந்த நேரத்தில் முட்டாள்தனமான வேலையை செய்து விட்டேன், மீண்டும் இப்படி நடக்காது” என எழுதியுள்ளார்.
திருடிய நபரை பிடிப்பதற்காக ஃபோர்ட் காலின்ஸ் காவல்துறையின் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட பதிவில், “இந்த திருடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு கேடு விளைவிப்பதற்காக ஓல்ட் டௌன் ஸ்குயர் குடியிலிருந்து குழந்தை இயேசு சிலையை திருடியுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் பதிவில் திருடியவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ‘நீங்கள் சந்தேகத்திற்குரிய இந்த நபரை பார்த்தால், ஆபிஸர் பிரிட்டிங்ஹாம்க்கு தெரிவியுங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டு அதற்கான தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டிருந்தது.
சில நாட்களுக்குப் பிறகு (december 20) காவலர்கள் குழந்தை இயேசு சிலை மீண்டும் கிடைத்ததை அறிவித்துள்ளனர். திருடிய நபர் குறித்து தகவல்கள் தெரிந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஃபாக்ஸ் நியூஸின் செய்தி அறிக்கை படி, சிலையில் சில விரல்கள் மட்டும் சேதமாகி இருக்கின்றன. இருப்பினும் இந்த சேதம் ஏற்கெனவே இருந்ததா என்பதை உறுதிசெய்யவில்லை.
திருடிய சிலையை மீண்டும் வைக்கும் மனமாற்றம் அந்த திருடனுக்கு எப்படி வந்திருக்கும். இந்த விநோத சம்பவத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமுடன் உள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். திருடரை கண்டுபிடிக்க காவலர்கள் முயற்சி செய்து தேடிவருகின்றனர்.