கோவையில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சிதம்பரம் நெடுமாறனுக்கு (சரத்குமார்) ஒரு விபத்தின் காரணமாக `அல்சைமர்ஸ்’ எனப்படும் மறதி பாதிப்பு உண்டாகிறது. இன்னும் ஒரு வருடத்தில் அவரின் மொத்த நினைவுகளும் அழிந்துவிடும் என்ற நிலை. இதனிடையே அந்த நகரில் `ஸ்மைல் மேன்’ எனப்படும் சீரியல் கில்லரால் தொடர் கொலைகள் நடக்கின்றன. சி.பி.சி.ஐ.டி பிரிவுக்குப் புதிதாக வரும் அரவிந்த் (ஸ்ரீகுமார்), குற்றவாளியைப் பிடிப்பதற்காக இந்த வழக்கை இதற்கு முன்னர் கையாண்ட சிதம்பரம் நெடுமாறனிடம் உதவி கேட்கிறார். இருவரும் சேர்ந்து குற்றவாளியைக் கண்டறிந்தனரா என்பதே இந்த `தி ஸ்மைல் மேன்’.
சிதம்பரம் நெடுமாறன் எனும் காவல் அதிகாரியாகக் கச்சிதமாக நம் மனத்தில் பதிகிறார் சரத்குமார். தன் 150வது படத்தை நூறு சதவிகிதம் தாங்கி நிற்கவேண்டிய பொறுப்பும் அவரிடமே! அந்தப் பணியைக் குறைகள் இல்லாமல் செய்திருக்கிறார். வெல்டன் சரத்! இரண்டாம் நாயகனாக வரும் ஸ்ரீகுமார், நடிப்புக்கு இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். எந்த மோஷனும் இல்லாமல் எமோஷனை வெளிப்படுத்துவது எல்லாம் நியாயமே இல்லை சார்! பிளாஷ்பேக்கில் வரும் இனியா, ரிட்டையர்டு போலீஸாக வரும் ஜார்ஜ் மரியன், மற்றொரு காவல் அதிகாரியாக வரும் சிஜா ரோஸ் நடிப்பில் குறைகள் இல்லை. குழந்தைகளை வயதுக்கு மீறிய வசனங்கள் பேசவைக்கும் கேட்டகரியில் இந்தப் படமும் இணைந்திருப்பது சறுக்கல். கதையின் முக்கியமானதொரு பாத்திரத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஏமாற்றமளிக்கிறார் கலையரசன்.
ஆரம்பத்தில் வரும் அந்த ‘பாயின்ட் ஆஃப் வியூ’ சேஸிங் காட்சி, பெரும்பாலான இரவு நேரக் காட்சிகள் என சீரியல் கில்லர் படத்துக்குத் தேவையான அமானுஷ்யமான ஒளிப்பதிவைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன். படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் இரண்டு மணி நேரம் படத்தின் வேகம் குறையாது பார்த்துக் கொள்கிறார். கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசையில் மரண ஓலம், விலங்குகள் சத்தம் எனப் பல பரீட்சார்த்த முயற்சிகள். ஆனால் அவை முழுமையாக இல்லாமல் இரைச்சலாக மாறியிருப்பது காட்சிகளுக்கும் பலவீனமாக மாறியிருக்கிறது.
இயக்குநர்கள் ஷியாம் – பிரவீன் ‘இதுதான் முடிவு’ என்று கணித்திட முடியாத ஒரு சீரியல் கில்லர் கதையைச் சொல்ல முயன்றிருக்கின்றனர். பரபரப்பான திரைக்கதை அமைப்பு அதற்கு உதவினாலும் ‘லாஜிக், கிலோ என்ன விலை?’ என்பதை ஒவ்வொரு துப்பறியும் காட்சிக்கும் கேட்க வேண்டியதாக இருக்கிறது. வழி நெடுக ட்விஸ்ட்ஸ், அழுத்தமில்லாத பிளாஷ்பேக் போன்றவையும் கூடுதல் சிக்கலாக மாறியிருக்கின்றன. வழக்கு தன்னிடம் வருவதற்கு முன்னரே சரத்குமார் கதாபாத்திரம் எடுக்கும் அந்த முயற்சிகள் எதற்கு என்பதற்கும் போதிய விளக்கம் இல்லை.
அதே சமயம், படத்தை முழுமையாகப் பார்க்க வைப்பதே சரத்குமாரின் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும் அவரின் நேர்த்தியான நடிப்பும்தான். வசனங்களும் அவருக்கு மட்டுமே சிறப்பாக இருப்பதாகத் தோன்றுவது, பிற கதாபாத்திரங்களில் இந்த நேர்த்தி மிஸ்ஸாவது எனக் குழப்ப ரேகைகளைப் படரவிடுகிறது கமலா அல்கிமீஸின் எழுத்து. குற்றவாளி சீரியல் கில்லராக மாறுவதற்கான காரணங்கள், அதன் பின்னர் நடக்கும் அந்த பிளாஷ்பேக் என எதிலுமே தேவையான எமோஷன்கள் அழுத்தமாகக் கடத்தப்படவே இல்லை.
போலீஸார் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் காட்சிகள்கூட சம்பிரதாய வசனங்கள் கொண்டே நிரப்பப்பட்டது ஏமாற்றமே! ‘காப்பிகேட் கில்லர்’ என்ற வார்த்தைக்குக் கூட அர்த்தம் தெரியாமலா சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இருப்பார்கள்? “சீரியல் கில்லர்ன்னா தொடர்ந்து கொலை பண்ணுவாங்க!” என்கிற ரீதியிலெல்லாம் வசனங்களை இட்டு நிரப்பியிருப்பது பரீட்சைத் தேர்வுத் தாளினை ஒரு கல்லூரி மாணவன் கஷ்டப்பட்டு நிரப்பிட நினைக்கும் முயற்சியாக குபீர் கிளப்புகிறது.
சரத்குமாரை மட்டுமே நம்பி, சுற்றிச் சுற்றி சீரியல் ஒரு கில்லரின் கதையைச் சொல்லியிருக்கும் இந்த `தி ஸ்மைல் மேன்’ நம்மை எந்த விதத்திலும் அச்சுறுத்தவில்லை.