அமெரிக்காவின் புளோரிடாவில் ஆர்லாண்டோவின் தெற்கே உள்ள கிஸ்ஸிமியில் உள்ள ஒரு பெண், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.
அங்கு தனது காதலன் மற்றும் அவர்களது ஐந்து வயது மகளுடன் சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் சாப்பிட ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்துள்ளனர். அவர்கள் ஆர்டர் செய்த பீட்சாவை, ப்ரியானா அல்வெலோ என்ற 22 வயதான இளம் பெண் டெலிவரி செய்துள்ளார். அப்போது, அந்தப் பெண் பிரியனா அல்வெலோவிற்கு 2 டாலர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
ஆனால், “2 டாலர் டிப்ஸ் போதுமானதாக இல்லை. மேலும் டிப்ஸ் வேண்டும்” என்று கூடுதலாக கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். அதனால் இருவருக்கும் வாக்கு வாதம் நடந்திருக்கிறது.
இதில் ஆத்திரமடைந்த பிரியானா அல்வெலோ, முகமூடி அணிந்த தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து, அந்தப் பெண் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு, பெண்ணின் காதலனை தனி அறையில் அடைத்து வைத்து, அப்பெண்ணை 14 முறை கத்தியால் சரமாரியாக குத்தியிருக்கிறார். மேலும், அறையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
பிறகு அவரது காதலன் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு தாக்குதலுக்குள்ளானப் பெண் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இச்சம்பத்தில் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, பிரியானா அல்வெலோவை கைது செய்துள்ளனர். தலைமறைவான அவரது ஆண் நண்பர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.