புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான நலத் திட்டங்களை நிறுத்துவதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் திட்டமிடுவதாக டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீட்ஷித் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சியால் அறிவிக்கப்பட்டிருக்கும் நலத் திட்டங்கள் குறித்து விசாரணை நடத்த துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவிட்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜ்ரிவால், “பாஜகவுக்கு நேரடியாக செயல்படுவதற்கு தைரியம் இல்லை. அதனால் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தை புகார் அளிக்க செய்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியை தடுப்பதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் இணைந்து செயல்படுகிறன. பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.2,100 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச மருத்து சேவை அளிக்கப்படும் என்று நான் அறிவித்திருந்தேன். இந்த இரண்டு திட்டங்களும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், ஏற்கெனவே இவ்விரு திட்டத்துக்கு லட்சக்கணக்கானோர் பதிவு செய்துள்ளனர். இது பாஜகவை பதற்றப்பட வைத்துள்ளது.
அனைத்தையும் நிறுத்துவதற்காகதான் பாஜக இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால், நீங்கள் பெற்றுவரும் அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்திவிடுவார்கள். பாஜகவுக்கு நீங்கள் வாக்களித்தால், நீங்கள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். மகிளா சம்மன் யோஜனா, சஞ்சீவினி யோஜனா இரண்டும் தேர்தல் வாக்குறுதிகளே. அவை நடைமுறையில் உள்ள திட்டங்கள் இல்லை. இதில் விசாரணை நடத்த என்ன இருக்கிறது? இந்தத் திட்டங்களில் பதிவு செய்வதற்காக ஆம் ஆத்மி கட்சியால் நடத்தப்படும் முகாம்களுக்கு பாஜக, குண்டர்களை அனுப்பி தடுக்கவும், பதிவு செயல்பாட்டை நிறுத்த டெல்லி போலீஸையும் ஈடுபடுத்துகிறது.
பாஜக பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் நலன்களை விரும்பவில்லை. அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள், அவர்களின் வளர்ச்சியை விரும்பவில்லை. அவர்கள் என்னை சிறைக்கு அனுப்பினால் டெல்லி மக்களுக்காக நான் மீண்டும் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். உங்களின் கேஜ்ரிவாலை நம்புங்கள், ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருக்கும் நலத் திட்டங்களில் பயன்பெற தொடர்ந்து பதிவு செய்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தீப் தீட்சித் அளித்த புகார் மனுவில், மகிளா சம்மன் யோஜனா மூலம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,100 வழங்குவதாக அறிவித்திருக்கும் ஆம் ஆத்மியின் முயற்சி குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அந்தத் திட்டத்துக்கு பதிவு செய்வதாக கூறி தனிநபர் தகவல்களைச் சேகரிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தது.