திருப்பூர்: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி திருப்பூர் காங்கயம் சாலையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில் 3 மணி நேரத்தில் குற்றவாளியை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். பலர் வெளிநாடுகளில் பயின்று மேம்பட்ட அரசியலை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் இவர் சாட்டையால் அடித்துக் கொள்கிறார். கவுண்டமணி சாட்டையால் அடித்துக் கொள்வதை போல உள்ளது. இதனை தமிழக மக்கள் மட்டுமல்லாது பாஜகவினரே ஏற்கவில்லை. நடிகர் எஸ்.வி.சேகரே, இவரை கோமாளி என்கிறார்.
சாட்டை என்ற பெயரில் சேட்டை செய்கிறார். இந்த கோபம் நியாயமானது. இதேபோன்று மணிப்பூர் போன்ற மற்ற நிகழ்வுகளுக்கு கோபத்தைக் காட்டவில்லை. பாதிப்பு, அநீதி யாருக்கு நடந்தாலும், அதில் பேதம் பார்க்கக்கூடாது. குறுகிய மனநிலையை இந்த சம்பவம் காட்டுகிறது. அம்பேத்கர் விவகாரத்தில், அதானி விவகாரம் மறைக்கப்பட்டுள்ளது.
தலைவர்களை திரையில் தேடுவதை விட, களத்தில் தேடுங்கள் என்பதே எங்கள் கொள்கை. ஆனால் தமிழகத்தில், திரைத்துறையும் அரசியலும் ஒன்றாகவே உள்ளது. விஜய்யின் அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலர் நேரில் சென்று நிவாரணம் வழங்கினர். ஆனால் இவர் பனையூருக்கு அழைத்து நிவாரண உதவிகள் வழங்குகிறார். எம்.ஜி.ஆர் கூட இதனை செய்யவில்லை. நடிகர் விஜய்யின் அரசியல் மேட்டுக்குடி அரசியலாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 5 முனை போட்டி இருக்கும். ஆனால், திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.
போதை கலாச்சாரம் பரவி வருவது ஆபத்தானது. இந்த விஷயத்தில் திமுக அரசு, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.