புதுடெல்லி: மன்மோகன் சிங் மறைவை அடுத்து காங்கிரஸ் செயற்குழு கூடியதுபோல் பிரணாப் முகர்ஜி மறைவை அடுத்து கூட்டப்படவில்லை என அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி ஆதங்கத்துடன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “அப்பா இறந்தபோது, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூட காங்கிரஸ் கருதவில்லை. குடியரசு தலைவர்கள் 4 பேருக்கு இவ்வாறு கூட்டவில்லை என மூத்த தலைவர் ஒருவர் கூறினார். கே.ஆர்.நாராயணன் மறைவை அடுத்து காங்கிரஸ் செயற்குழுவை கூட்டியதும், இரங்கல் தீர்மானத்தை தயார் செய்ததும் அப்பாதான் என அவரது நாட்குறிப்பு மூலம் பின்னர் தெரிந்து கொண்டபோது வேதனையாக இருந்தது.
அதேநேரத்தில், மன்மோகன் சிங்குக்கு ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது ஒரு சிறந்த யோசனை. அவர் அதற்குத் தகுதியானவர். அதோடு, அப்பா குடியரசுத் தலைவராக இருந்தபோது மன்மோகன் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க விரும்பினார். ஆனால், 2 காரணங்களால் அது நடக்கவில்லை. அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் அவருக்கு நினைவிடம் கட்டுவதற்கு ஏற்ப அரசு இடம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியதை அடுத்து தனது அதிருப்தியை சர்மிஸ்தா முகர்ஜி வெளிப்படுத்தியுள்ளார். கார்கேவின் கடிதத்துக்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சகம், “நினைவிடம் அமைக்க அரசு இடம் ஒதுக்கும். அது குறித்து பின்னர் காங்கிரஸ் தலைவருக்கும் மன்மோகன் சிங்கின் குடும்பத்துக்கும் தெரிவிக்கப்படும். இப்போதைக்கு மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடக்கட்டும். ஏனெனில், நினைவிடம் தொடர்பாக ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டு அதற்கு நிலம் ஒதுக்கப்படும். பின்னர், அங்கு நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம்” என தெரிவித்தது.
இதனிடையே, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக விளங்கிய ராஜாஜியின் பேரனும், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளருமான சி.ஆர். கேசவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவது உண்மையில் நகைப்புக்குரியது. ஏனெனில், இறுதிச் சடங்கு நடந்த இடம் புனிதமான நினைவிடமாக மாறும். 2004-ல் மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்-க்கு 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நினைவிடம் கட்டவில்லை என்பதை கார்கேவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நினைவிடம் கட்டவே இல்லை.
நரசிம்மராவுக்கு 2015-ல் ஒரு நினைவிடத்தை நிறுவி, 2024-ல் பாரத ரத்னா விருது வழங்கி மறைவுக்குப் பின் அவரைக் கவுரவித்தவர் பிரதமர் மோடி மட்டுமே. மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு தனது புத்தகத்தில், நரசிம்ம ராவின் தகனம் டெல்லியில் நடைபெறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும், மாறாக ஹைதராபாத்தில் நடக்க வேண்டும் என்றும், இதை நரசிம்மராவின் வாரிசுகளுக்கு தெரிவிக்க தான் அணுகப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். நரசிம்ம ராவின் உடல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் வைக்கப்படாத நிலையில், ஹைதராபாத்தில் தகனம் செய்யப்பட்டது. கொள்கையற்ற காங்கிரஸின் வரலாற்றுப் பாவங்களை நம் தேசம் ஒருபோதும் மறக்காது; மன்னிக்காது” என தெரிவித்துள்ளார்.