சென்னை: அனைத்து துறைகளிலும் தனியார் மயத்தை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், மாநகராட்சி செங்கொடி சங்கத் தலைவர் பட்டாபி ஆகியோர் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து செங்கொடி சங்க பொதுச்செயலாளர் சீனிவாசலு கூறியதாவது: சென்னை மாநகராட்சி மற்றும் அரசுத் துறைகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும். அனைத்து துறைகளிலும் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகை போனஸ் வழங்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக மலேரியா தடுப்பு பணி, சாலை பணி, அம்மா உணவகம், தூய்மை பணி போன்றவற்றில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களை, காலியாக உள்ள பணியிடங்களில் நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.