கர்நாடகாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக திருநங்கை ரேணுகா புஜார் என்பவர் கவுரவ விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக மாநிலம் விஜயநகராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழக பதிவாளர் ரமேஷ் குமார் கூறுகையில், ”எங்களது பல்கலைக்கழகத்தின் கன்னட முதுகலை பிரிவில் ரேணுகா புஜார் (27) என்கிற திருநங்கை கன்னடத் துறையில் கவுரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எங்கள் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான அவர் முதுகலை பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.
கவுரவ விரிவுரையாளர் பொறுப்புக்கு 30 பேர் விண்ணப்பித்தனர். அதில் இவர் தேவையான தகுதிகள் மற்றும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். எனவே. தேர்வு குழுவினர் ரேணுகா புஜாரை தேர்வு செய்தனர். கர்நாடகாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் திருநங்கை ஒருவரை கவுரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்”என்றார்.
இதுகுறித்து திருநங்கை ரேணுகா புஜார் கூறுகையில், ”பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்த நிலையை அடைந்திருக்கிறேன். இதற்கு காரணமாக இருந்த பல்கலைக்கழக நிர்வாகம், எனது குடும்பத்தினர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது பெற்றோர் விவசாய கூலியாக இருந்து, என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். கல்வியின் மூலமாகவே சமூக மாற்றம் நிகழும் என உறுதியாக நம்பினேன். இப்போது அது நிஜமாகியுள்ளது. என்னைப் போன்ற திருநங்கைகள் வாழ்க்கையில் முன்னேற நான் உதவியாக இருப்பேன்”என்றார்.