கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா வரும் 30, 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பிதழும் வெளியானது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை தொடர்ந்து 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அரசு அறிவித்ததால் விழா நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், பெரிய ஆடம்பரம் இன்றி விழாவை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே அரசு அழைப்பிதழில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார் கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம்.
`மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு’ – தளவாய் சுந்தரம்
இதுகுறித்து தளவாய் சுந்தரம் கூறுகையில், “கன்னியாகுமரியில் ஐயன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30-12-2024 முதல் 01-01-2025 வரை தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஐயன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தனர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு, வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல், திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல், அய்யன் திருவள்ளுவர் தோரண வாயில் அடிக்கல் நாட்டுதல் போன்ற பல்வேறு விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா அழைப்பிதழில் பட்டிமன்றத்தில் உரையாற்றுபவர்களின் பெயர்கள் அரசு அதிகாரிகளின் பெயர்கள், கவிஞர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், மாவட்டத்தில் மக்களின் நலனுக்காக அயராது உழைத்து வருகின்ற மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் மட்டும் இடம் பெறாமல் புறக்கணிக்கப் பட்டுள்ளது. இது மாவட்ட மக்களை அவமதிக்கின்ற செயலாகும். அரசு சார்பில் நடைபெறுகின்ற அனைத்து விழாக்களிலும் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம்பெறுவது நெறிமுறையாகும். இந்த நெறிமுறைகளுக்கு மாறாக முதலமைச்சர் பங்கேற்கின்ற அரசு விழாவில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம்பெறாமல் இருக்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகதான் இருக்கும் என கருதுகிறேன்.
`ஜனநாயகத்திற்கு விரோதமான நிலை..’
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் ஒரு பாராளுமன்ற தொகுதியும், ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன. ஒரு சட்டமன்றத் தொகுதி மட்டுமே தி.மு.க வசம் உள்ளது. இதனை மனதில் கொண்டே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகளின் பெயர்களை வேண்டும் என்றே இடம் பெறாமல் செய்துள்ளார்கள் எனநினைக்கிறேன்.
சாதராணமாக நீதிமன்ற கட்டட திறப்பு விழாக்களில் மட்டுமே இது போன்ற நிலை இருந்து வருகிறது. அரசு சார்பில் நடைபெறுகின்ற இவ்விழாவில், இதுபோன்ற நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும். புரோட்டாக்காலை மீறி மக்கள் பிரதிநிதிகள்பெயர்கள் இடம் பெறாமல் விழா அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
எதிர்காலத்திலும் இதனை முன்மாதிரியாகக்கொண்டு அரசு அழைப்பிதழ்களில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் இடம் பெறாமல் செய்வதற்கு வழி வகுக்கும். வரும் காலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள், ஆட்சியில் இல்லாத பிற மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை அரசு அழைப்பிதழ்களில் இடம் பெறாமல் தவிர்க்க செய்கின்ற நிலை ஏற்பட்டு ஜனநாயகத்திற்கு விரோதமான நிலை ஏற்பட்டு விடும்.
தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எந்த வளர்ச்சித்திட்டமும் கொண்டுவரவில்லை. இப்போது இருக்கும் நிலையில் அது பற்றி முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களே அரசுக்கு எதிராக பேசிவிடுவார்களோ என்ற பயத்தில்தான் பெயர் போடாமல் தவிர்த்திருக்கிறார்கள். திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக பேசினால் அது பெரிய விவாதத்தை ஏற்படுத்திவிடும் என பயப்படுகிறார்கள்” என்றார்.