சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஞானசேகரன் என்பவர் அத்துமீறி நுழைந்து, மாணவர் ஒருவரை அடித்து உதைத்துவிட்டு உடன் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதை செல்போனிலும் படம் எடுத்துள்ளார்.
அப்போது அவர் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார் சார் என்று பேசியதாகவும் அந்த மாணவர் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த சார் யார் என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் காவல்துறை உயரதிகாரி, பாலியல் வன்கொடுமை செய்தது ஞானசேகரன் மட்டும்தான் என்கிறார்.
ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி எப்படி பல்கலைக்கழக வளாகத்துக்குள் எளிதாக நடமாட முடியும். இதை எப்படி அனுமதித்தார்கள்?
முதலில் பல்கலைக்கழக போஷ் கமிட்டிக்கு புகார் வந்ததாக காவல்துறை அதிகாரியும் நேரடியாக காவல் நிலையத்துக்குத்தான் புகார் வந்ததாக உயர் கல்வித்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர். இருவரும் முரண்பட்ட தகவலை தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஆளுங்கட்சியினர் சம்மந்தப்பட்டுள்ளனர். ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவராக இருப்பதாக தகவல் வருகிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களை தப்பிக்க வைக்க காவல்துறை செயல்படுகிறதோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நடுநிலையோடு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க இந்த வாழ்க்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
அண்மைக் காலமாக பல்வேறு பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு சிறுமிகள் உட்படுத்தப்படுகின்றனர். இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோர் திமுகவில் பலர் இருப்பதாக செய்திகள் வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நிர்வாக சீர்கேடு அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை கோரி ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறோம்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதை கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், அது வரும் 30-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, மாதவரம் மூர்த்தி, பா.பென்ஜமின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.