புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

புனே,

11-வது புரோ கபடி லீக் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் – உ.பி. யோத்தாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சரி சமபலத்துடன் மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. இதனால் முதல் பாதியில் அரியானா வெறும் ஒரு புள்ளி மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.

பிற்பாதியில் அரியானா அணி எதிரணியை ஒரு முறை ஆல்-அவுட் செய்து முன்னிலையை அதிகப்படுத்தியது. அதை இறுதிவரை கெட்டியாக பிடித்து கொண்ட அரியானா 28-25 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அரியானா அணியில் அதிகபட்சமாக சிவம் பட்ரே 7 புள்ளியும், வினய் 6 புள்ளியும் எடுத்தனர்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி 32-28 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை பதம்பார்த்து 5-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. ரைடில் கலக்கிய பாட்னா வீரர்கள் தேவாங்க், அயன் தலா 8 புள்ளிகள் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ். பாட்னா பைரேட்ஸ் அணிகள் கோதாவில் இறங்குகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.