புதுடெல்லி: மன்மோகன் சிங் இறுதிச் சடங்குக்குப் பின்னர் அவருக்கான நினைவிடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் (டிச.26) இரவு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 9.51 மணி அளவில் காலமானார்.
இதையடுத்து, டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு, தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, டெல்லி முதல்வர் அதிஷி, முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அவரது மறைவுக்கு தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள், உலகத் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் மன்மோகன் சிங் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு விழாக்களும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி யமுனை நதிக்கரையில் நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்தில் சீக்கிய மத முறைப்படி இன்று காலை 11.45 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
அரசு வட்டாரத் தகவல்: இந்நிலையில் மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு முடிந்தபின்னர் அவருக்கான நினைவிடம் ஒதுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, டெல்லியில் விவிஐபி.,க்களுக்கு தனியாக நினைவிடங்கள் அமைக்கப்படாது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர்கள் போன்ற தேசியத் தலைவர்கள் மறையும்போது அவர்களுக்கு நினைவிடம் அமைக்க ஒரு பொது வளாகம் உருவாக்கப்படும் என்ற முடிவு எட்டப்பட்டது.
அதனை மேற்கோள்காட்டியுள்ள தற்போதைய அரசு மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக முதலில் ஓர் அறங்காவலர் குழுவை அமைத்து அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று நினைவிடம் தொடர்பான தகவல் குடும்பத்தினருக்கும், கார்கேவுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய தகவல்களை சம்பத்தப்பட்டோரிம் பகிர்ந்ததாகத் தெரிகிறது.