பெங்களூரு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு களை இழந்து காணப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அண்ணல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதன் 100-வது ஆண்டை நினைவுகூறும் வகையில் காங்கிரஸ் சார்பில் 2 நாள் சிறப்பு செயற்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தொடங்கிய மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் காலமானார். அதனால் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் உடனடியாக டெல்லிக்கு திரும்பினர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய தலைவர்களும் டெல்லிக்கு விரைந்தனர்.
இதனால் 2-வது நாளான நேற்று மாநாடு களை இழந்து காணப்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் பரமேஷ்வரா, சதீஷ் ஜார்கிஹோளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக மறைந்த மன்மோகன் சிங்கின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் வீரசவுதாவில் காந்தி சிலையை முதல்வர் சித்தராமையா திறந்துவைத்தார். அங்கு காந்தியின் புகைப்பட கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால், காங்கிரஸ் மாநாடு களை இழந்து காணப்பட்டது.