அண்ணா பல்கலைக் கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரிப்பதாக பா.ஜ.க தலைவர் அண்ணமலை சாட்டையால் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையில், ஆளும் தரப்பும், காவல்துறையும் உரிய விசாரணை நடந்துவருவதாகவும், குற்றவாளிக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, “மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எளிமையானவர், பொருளாதார நிபுணர். அவர் நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவை பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர். 10 ஆண்டுகாலம் இந்திய நாட்டின் பிரதமாராக இருந்து ஆட்சி புரிந்தவர். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், காங்கிரஸை சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவம் என்றால் அது அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்தான்.
அந்த மாணவியை மிரட்டிய ஞானசேகர் என்பவர் அப்போது செல்போனில் ‘சார்.. சார்…’ எனப் பேசியதாக மாணவி குறிப்பிட்டிருக்கிறார். யார் அந்த சார் என்பதை இப்போதுவரை வெளிப்படுத்தவில்லை. ஆனால், காவல்துறை, இந்தக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர் ஒருவர்தான் எனக் கூறியிருக்கிறது. அந்த மாணவி குறிப்பிட்ட அந்த சார் யார் என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. அதை மறைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் கல்லூரிக்குள் ஒருவர் எப்படி அடிக்கடி சென்று வரமுடியும்.
70 சிசிடிவி கேமராவில் 56 சிசிடிவி கேமராதான் இயங்குவதாக கூறப்படுகிறது. அப்படியானால் மற்றவை ஏன் இயங்கவில்லை. கைது செய்யப்பட்ட ஞானசேகர் சரித்திரப் பதிவேடு இருக்கும் குற்றவாளி. ஒரு குற்றவாளி எப்படி அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் அடிக்கடி சென்றுவர முடியும். ஞானசேகரனை 24-ம் தேதி விசாரித்தவுடன் அவரை வெளியே விடுகிறார்கள். இது எப்படி சரியான நடவடிக்கை? காவல்துறை அதிகாரி 100-க்கு புகார் வந்தவுடன் புகார் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார். ஆனால் அமைச்சர் மாணவி நேரில் புகார் அளித்தவுடன் புகார் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார். இந்த முரண்பட்ட தகவலால்தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது.
எனவே இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் பல்வேறு அமைச்சர்களுடன், தி.மு.க-வுடன் நெருக்கமானவர் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகிறது. அண்ணா நகரில் சிறுமிக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்கிறது. இதை எதிர்த்து ஆளும் அரசு உச்ச நீதிமன்றம் சென்று மேல் முறையீடு செய்கிறது. பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக தி.மு.க அரசு செயல்படுகிறது என்பது வெட்கக்கேடு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் செவிலியரின் அந்தரங்கப் புகைப்படத்தைக் காட்டி 10 லட்சம் ரூபாய் கேட்டதாக ஒருவர் மீது புகார் அளிக்கப்படுகிறது. அவர் தி.மு.க நிர்வாகி என பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகிறது. அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் புகார் அளித்தப் பெண் தொடர்பான தகவல்கள், எஃப்.ஐ.ஆர் எப்படி வெளியானது.
இப்படி இருந்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி தைரியமாக வெளியே வந்து புகார் அளிப்பார்கள். வரும் 30-ம் தேதி இந்த அரசை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இரண்டுமுறை ஆளுநரை சந்தித்திருக்கிறோம். மீண்டும் ஆளுநரை விரைவில் சந்திப்போம். குற்றவாளிகளும், அதற்கு துணைப்போனவர்களும் தப்பிக்க முடியாது என உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்