முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நீல நிற தலைப்பாகையின் ரகசியம் என்ன…?

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் (வயது 92) திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

அனைவரிடமும் மென்மையாக பேச கூடிய அணுகுமுறையை கொண்ட மன்மோகன் சிங் வெள்ளை தாடி, பெரிய கண்ணாடி மற்றும் நீல நிற தலைப்பாகை என காட்சி தருவார். அவருடய தலைப்பாகை நீல நிறத்தில் இருப்பதன் ரகசியம் என்ன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அதுபற்றி அவரே கூறியிருக்கிறார். 2006-ம் ஆண்டில் லண்டன் நகரில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அப்போது எடின்பர்க் அரசர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வேந்தரான இளவரசர் பிலிப், சிங்கிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியபோது, அவருடைய தனித்துவம் வாய்ந்த நீல வண்ண தலைப்பாகையை கவனித்து உள்ளார். அதன் வண்ணம் பற்றி அவர் குறிப்பிட்டதும், பார்வையாளர்கள் வரிசையில் இருந்து கரவொலி எழுந்தது.

இதன்பின்னர் பேசிய சிங், என்னுடைய விருப்பத்திற்குரிய வண்ணங்களில் நீலம் ஒன்று. அதனால், என்னுடைய தலையின் மீது அடிக்கடி அது காணப்படுகிறது என கூறி புன்னகையை வெளிப்படுத்தினார். வெளிர் நீலம் எப்போதும் தனக்கு பிடித்த நிறம் என்றும் அதனால், பல ஆண்டுகளாக வழக்கம்போல் பயன்படுத்த கூடிய ஒன்றாக அது உருமாறி விட்டது என்றும் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்த என்னுடைய நினைவுகள் ஆழம் வாய்ந்தவை. தன்னை நீல நிற தலைப்பாகை என புனைப்பெயர் வைத்தே பாசத்துடன் சக மாணவர்கள் அழைப்பார்கள் என்றும் அப்போது அவர் நினைவுகூர்ந்து பேசினார். படிப்பு காலம் முடிந்த பின்னரும் இந்த பெயர் அவருடன் ஒட்டி கொண்டது.

இந்த பேச்சின்போது, பொருளாதார நிபுணர்கள் உள்பட, குறிப்பிடத்தக்க தன்னுடைய பேராசிரியர்களான நிகோலஸ் கல்டார், அமர்த்தியா சென் உள்ளிட்டோரை பற்றியும் பேசியுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1957-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் முதல் வகுப்பில் பட்டப்படிப்பை சிங் முடித்துள்ளார். தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார். இதனால், பொருளாதார படிப்பின் மீது அவருடைய ஆர்வம் அதிகரித்து, தொடர்ந்து அதில் பல்வேறு பட்டங்களையும் பெற்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.