விழுப்புரம்: பாமக இளைஞர் சங்கத் தலைவர் நியமனத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. பொதுக் குழுக் கூட்ட மேடையிலேயே இருவரும் மாறி மாறி கருத்து தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ராமதாஸ் “இது நான் ஆரம்பித்த கட்சி, நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள்” என்று ஆவேசமாக கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில், பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தன் பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்து, “அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், “யார்… எனக்கா?” என்றார். அதற்கு ராமதாஸ் “ஆமாம்” என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது அன்புமணி, “எனக்கெல்லாம் வேண்டாம். அவர் இப்போதுதான் கட்சிக்கு வந்து நான்கு மாதம் ஆகிறது. உடனடியாக அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு என்றால், என்ன அனுபவம் இருக்கிறது அவருக்கு? நல்ல அனுபவசாலிக்கு அந்தப் பொறுப்பைக் கொடுங்கள். முகுந்தன் பரசுராமனுக்கு வேறு ஏதாவது பதவி கொடுங்கள். இப்போது பேசும்போது கூட நான் அதைத்தான் கூறினேன். களத்தில் நல்ல ஆட்கள், திறமையானவர்கள் வேண்டும் என்று பேசினேன். வந்த உடனே இளைஞர் சங்க பொறுப்பைக் கொடுத்துக்கிட்டு…” என்று ஆவேசமாக பேசினார்.
அதற்கு ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க முடியாவிட்டால், யாரும் இனி இந்தக் கட்சியில் இருக்க முடியாது,” என்றார். அப்போது அரங்கத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர். அதற்கு அன்புமணி, “அது சரி” என்றார். அப்போது ராமதாஸ், “என்ன சரி, சரி என்றால் போ அப்போ,” என்றார்.
பின்னர் ராமதாஸ், “முகுந்தன் பரசுராமனை பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார்,” என்று அறிவித்தார். அதற்கு அன்புமணி, “குடும்பத்தில் இருந்து இன்னொருவரை தூக்கிப் போடுங்கள்,” என்று கூறி, கையில் இருந்த மைக்கை மேஜை மீது எறிந்தார். பின்னர் பேசிய அவர், “சென்னை பனையூரில், மூன்றாவது தெருவில் நான் புதிதாக அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். அங்கு வந்து அனைவரும் என்னைப் பார்க்கலாம்” என்று கூறி தொலைப்பேசி எண்ணை அறிவித்து, “இந்த எண்ணை குறித்து கொள்ளுங்கள், என்னைத் தொடர்பு கொண்டு அனைவரும் வந்து எப்போது வேண்டும் என்றாலும், என்னை வந்து பார்க்கலாம்” என்றார்.
அதற்குள் ராமதாஸ், “மீண்டும் கூறுகிறேன்… உங்களுடைய இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் பரசுராமன். இன்னொரு அலுவலுவகம் கூட திறந்து நடத்திக்கொள். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப்போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லையென்றால், அதற்கு வேறு ஒன்றும் நான் சொல்ல முடியாது” என்றார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து சலசலப்பில் ஈடுபட்டனர். அதற்கு ராமதாஸ், “நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இது நான் ஆரம்பித்த கட்சி. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள். விருப்பம் இல்லாதவர்கள், என் பேச்சைக் கேட்காதவர்கள் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம்,” என்றார்.