”ரம்யாவுக்கு மாப்பிள்ளைதான் வரதட்சணை கொடுத்தார்; ஏன்னா..!”- ரம்யா பாண்டியன் அம்மா

திருமணம் முடிந்த பூரிப்போடு தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

‘ஜோக்கர்’ மூலம் ரசிகர்களை அழ வைத்தவர். ‘ஆண் தேவதை’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தாலும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைக் குவித்தவர். ’குக் வித் கோமாளி’, ‘பிக் பாஸ்’ என சின்னத்திரையிலும் ரன்னர் – அப் ஆக கலக்கியவர். அடிக்கடி ஃபோட்டோ ஷூட்களால் வைரலாகும் ரம்யா பாண்டியனின் திருமணம் சமீபத்தில் ரிஷிகேஷில் நடந்துள்ளது. வாழும் கலை அமைப்பின் யோகா மாஸ்டர் லவல் தவானை காதலித்து கரம்பிடித்துள்ளார்.

இந்தநிலையில், ரம்யா பாண்டியனின் திருமணம் குறித்து அவரது அம்மா சாந்தி துரைபாண்டியனிடம் பேசினேன்… “எங்களது சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனா, சென்னைக்கு குடிபெயர்ந்துட்டோம்.

ரம்யா பாண்டியன் குடும்பத்தினர்

எங்களோட முதல் பொண்ணு திரிபுர சுந்தரி காஸ்டியூம் டிசைனரா சினிமாவுல ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கா. ரெண்டாவது பொண்ணுதான் ரம்யா. மூணாவதா பரசுராம், கேம் டிசைனரா ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கான். என்னோட கணவர் துரை பாண்டியன், ’ஊழியன்’, ‘மாஸ்டர் ப்ளான்’ படங்கள் இயக்கினாரு. அப்போல்லாம், நாங்க சென்னையிலதான் இருந்தோம். அவர், இயக்கின படங்கள் சரியா போகாததால நஷ்டமாகிடுச்சு. அதனால, திருநெல்வேலிக்குப் போய் ஹோட்டல் பிசினஸ் செய்தோம்.

ரம்யா பத்தாவது படிக்கும்போது ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் வந்தா. பத்தாம்வகுப்புல ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்ததால, புஷ்பலதா ஸ்கூலில் மெரிட்ல சீட் கிடைச்சது. அங்கும் ப்ளஸ் டூவுல ஸ்கூலில் மூணாவது இடம் பிடிச்சா. அதுமட்டுமில்லாம, ஃப்ரெஞ்ச் பாடத்துல 191 மார்க் எடுத்து ஃபர்ஸ்ட் மார்க் வந்தா. அப்படியொரு, படிப்பாளி. ஒருநாள்கூட ஸ்கூலுக்கு லீவு போடமாட்டா. அதானாலேயே, ஆசிரியர்களுக்கு அவளை ரொம்ப பிடிக்கும். டிசிப்ளினுக்காகவே ஸ்கூல்ல மூணு மெடல்களை வாங்கினா. அவ மெடல் வாங்கும்போது அப்படியொரு சந்தோஷம். எங்களுக்கு வயல் எல்லாம் இருக்கு. கணவர் வயலுக்கு போயிடுவாரு. நான், ஃபுல்லா ஹோட்டலை பார்த்துக்குவேன்.

அப்போதான், எங்கக் குடும்பத்துல இப்படியொரு சோகம் நிகழ்ந்துடுச்சு. ரம்யாவோட அப்பா வயலில் விஷப்பூச்சி கடிச்சு இறந்துட்டாரு. கணவருக்கு இப்படி ஆகும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. கஷ்டமோ, நஷ்டமோ சென்னையிலேயே இருந்திருக்கலாமோன்னு தோணுச்சு.” என கலங்கினார்.

கணவருடன் ரம்யா பாண்டியன்

மேலும் தொடர்ந்தவர் ” என் கணவர் இறந்ததுலருந்து ரம்யா ரொம்ப பொறுப்பா நடந்துக்குவா. அவ எந்த முடிவு எடுத்தாலும் சரியாத்தான் இருக்கும். நான் ஒருத்தரை காதலிக்கிறேன்னு வந்து சொன்னப்பவும் அவளோட செலக்‌ஷன் கரெக்ட்டாத்தான் இருக்கும்னு ஓகே சொல்லிட்டேன். ஆரம்பத்துல அவ லவ் பண்ணினது எதுவுமே தெரியாது. அவளுக்கு யோகாவுல ரொம்பவே இன்ட்ரஸ்ட்.

சோழிங்கநல்லூர்ல இருக்கிற வாழும் கலை அமைப்புக்கு யோகா கற்றுக்கிறதுக்காக மூணு வாரம் கோர்ஸ் போனா. அதுக்கு அடுத்தக்கட்ட கோர்ஸா பெங்களூருக்கும் ரிஷிகேஷுக்கும் போனா. ரிஷிகேஷுக்கு போனப்பதான், யோகா மாஸ்டரா இருந்த லவல் தவானை மீட் பண்ணியிருக்கா. அவரோட நல்ல குணங்கள் இவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இவதான், தன்னோட காதலை அவர்க்கிட்ட சொல்லியிருக்கா. ஆனா, தான் ஒரு டீச்சராச்சே…ஸ்டூடண்ட்டை எப்படி லவ் பண்ணலாம்? அப்படின்னு யோசிச்சிருக்கார்.

ஆரம்பத்துல, இவ நடிகை என்பதெல்லாம் தெரியாதாம். ரம்யாவோட குணங்கள், அவளோட அணுகுமுறை எல்லாம் பிடிச்சுப்போயி ஒருக்கட்டத்துல அவரும் ஓகே சொல்லிட்டார். அதேநேரத்துல, தன்னோட குருஜி ரவிஷங்கர் ஓகே சொன்னதான் திருமணம்னு சொல்லியிருக்கார். ஏன்னா, வாழும் கலை அமைப்புல மாப்பிள்ளை ரொம்ப முக்கியமான யோகா மாஸ்டர்.

அம்மா, அக்கா, தம்பியுடன் ரம்யா பாண்டியன்

யோகா டீச்சருங்களுக்கெல்லாம் இவர்தான் புது புது கோர்ஸ்களை சொல்லித் தருவார். ஆயிரக்கணக்கான வாழும் கலை அமைப்பு யோகா மாஸ்டர்ஸ்ல இவர் டாப் 5-ல இருக்கிறவர். குருஜிதான் இவருக்கு நேரடியா சொல்லிக்கொடுப்பார். அதனால, குருஜிக்கு ரொம்ப நெருக்கம்.

முதலில், இவர் போயி தன்னோட குருஜிகிட்டே திருமணத்தைப் பற்றி பேசியிருக்கார். ஆனா, அவர்க்கிட்டேயிருந்து சரியான பதில் வரல. அப்புறம், ரம்யாவே தன்னோட பிறந்தநாளுக்கு குருஜிக்கிட்ட டைம் கேட்டு போயி நேர்ல சந்திச்சு கல்யாணத்துக்கு ஓகே வாங்கிட்டா. அப்புறம்தான் இந்த திருமணம் நடந்தது.

அதுவும், ரிஷிகேஷ்லதான் ரெண்டு பேரும் முதல் முதலில் மீட் பண்ணிக்கிட்டாங்கங்கிறதாலதான் அங்கேயே திருணத்தை வெச்சுக்கலாம்னு ரம்யாதான் சொன்னா. அதேமாதிரி, தாலியும் எங்க திருநெல்வேலி முறைப்படி கட்டணும்னு சொல்லியிருக்கா. ரம்யா சொன்ன எல்லாத்துக்குமே மாப்பிள்ளையும் ஓகே சொல்லிட்டார். சங்கீத், ஹல்தி ஃபங்ஷன் எல்லாம் அவரோட முறைப்படி பண்ணினோம்.

மாப்பிள்ளை ரொம்ப நல்ல டைப். திருமணத்துக்காக எந்த செலவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரம்யாதான், எனக்கு சுயமரியாதை இருக்கு. அதனால, ரிசப்ஷன் செலவை நான் ஏத்துக்கிறேன்னு அவளே பொறுப்பேற்றுக்கிட்டா. ரிஷிகேஷ்ல நடந்த திருமணத்துக்கான ஃப்ளைட் டிக்கெட், தங்கும் ஹோட்டல் உள்ளிட்ட எல்லா செலவுகளையுமே மாப்பிள்ளைதான் பார்த்துக்கிட்டார். பெரிய ஸ்டார் ஹோட்டல்ல செஃப்களை வைத்து ஆலோசனை செய்து அதற்கேற்றமாதிரி தென்னிந்திய, வட இந்திய உணவுகளை கொடுத்தாங்க. திருமணத்துக்கு வந்திருந்த ரெண்டு வீட்டு சொந்தங்களும் ரொம்ப நிறைவா வாழ்த்தினாங்க.

ரம்யா பாண்டியன் கணவர் லவல் தவானுடன்

ரம்யா, சித்தப்பா அருண் பாண்டியனுக்கும் மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுப்போச்சு. ஆரம்பத்துல ரம்யா மாப்பிள்ளையை ஃப்ரண்டுன்னுதான் எங்கக்கிட்டே சொல்லிருந்தா. அவர், சென்னை வந்திருந்தப்போ முதல் தடவை வீட்டுக்கு சாப்பிட இன்வைட் பண்ணிருந்தா. அப்போ, அவங்க லவ் பன்றது எல்லாம் எங்களுக்கு தெரியாது. எல்லோர்கிட்டேயும் ரொம்ப அன்பா, பெரியவங்கக்கிடே ரொம்ப மரியாதையா பழகினார். அப்பவே, எங்களுக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு.

ரெண்டாவது முறை கார்த்திகை தீபம் அன்னைக்கு மீண்டும் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருந்தார். திடீர்ன்னு தங்க மோதிரைத்தை எடுத்து என்கிட்டே முட்டிப்போட்டு ’அம்மா என்னோட மாமியாரா வருவீங்களான்னு சொல்லி, என்கிட்ட புரப்போஸ் பண்ணிட்டார். திடீர்ன்னு அவர் இப்படி கேட்டதால எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ’என்னாச்சு? எழுந்திரிங்க, எழுந்திரிங்க’ன்னு ரம்யாவோட அக்கா சொன்னபிறகு எழுந்து உட்கார்ந்தார். அப்பா, இல்லாத பொண்ணுன்னு ரம்யாவை ரொம்ப கேர் பண்ணிக்கிட்டார். எங்கள் மீதும் ரொம்ப மரியாதையும் அக்கறையும் கொண்டவர். இப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைஞ்சதுக்கு ரம்யா மட்டுமில்ல, நாங்களும் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும்.

கணவர் லவல் தவான் குடும்பத்தினருடன் ரம்யா பாண்டியன்

மாப்பிள்ளை குடும்பம் பஞ்சாப் மாநிலம். அவரோட அப்பா- அம்மா எல்லாருமே ரொம்ப நல்லை டைப். மாப்பிள்ளை எம்.பி.பி.எஸ் ரெண்டு வருசம் படிச்சிருக்கார். அதுல, இன்ட்ரஸ்ட் இல்லைன்னதும் யோகா சைடு வந்திருக்கார். திருமணமே வேணாம்னு இருந்திருக்கார். அவங்க அப்பா -அம்மாவும் திருமணம் பண்ணிக்க எவ்ளோ தடவை சொல்லி பார்த்தாங்களாம். ஆனா, இப்போ ரம்யாவை அவர் திருமணம் செஞ்சுக்கிட்டதுல அப்படியொரு சந்தோஷமா இருக்காங்க.

மாப்பிள்ளைக்கு குடும்பத்துக்கு பஞ்சாப்ல 8 மெடிக்கல் லேப் இருக்கு. 65 பேருக்கு மேல வேலை பார்க்கிறாங்க. ரம்யா மருமகளா முதல் தடவை வீட்டுக்கு வரப்போறான்னதும், பெட்ரூமையே ரொம்ப பெருசா மாற்றியிருக்காங்க. மாமனார் ரம்யா மேல பாசமா இருப்பார். அவரே, ரம்யா தங்கப் போற வீட்டுக்கு லைட்டிங், டெக்கரேஷன்லாம் அழகா பண்ணியிருக்கார். மிக முக்கியமாக எங்கக்கிட்டேயிருந்து ஒரு ரூபாய்க்கூட வரதட்சணை கேட்கல. பஞ்சாப் முறைப்படி பொண்ணு வீட்டுல வரதட்சணை கேட்கக்கூடாதாம். மாப்பிள்ளைதான் வரதட்சணை கொடுத்து திருமணம் பண்ணிக்கணுமாம்.

அம்மா சாந்தி துரைபாண்டியனுடன் ரம்யா

அப்படி, மாப்பிள்ளை வீட்டுல வரதட்சணை வாங்கினா கெளரவ குறைச்சலா பார்ப்பாங்கலாம். திருமணத்துக்கு முன்பு, மாப்பிள்ளையோட அப்பா, லட்சத்துல ஒரு பெரிய தொகையை கொடுத்து நகைகளை வாங்கிக்க சொன்னார். கீர்த்தி லால் நகைக்கடையில்தான் ரம்யாவும் நகைகள் எல்லாம் ஆர்டர் கொடுத்து ஃபோட்டோ எடுத்து அனுப்பினா. அதனால், எங்களுக்கு திருமணம் செலவு எதுவும் இல்ல. திருமணம் முடிஞ்சதும் ஒருவாரம் பஞ்சாப்புல இருக்கிற மாப்பிள்ளை வீட்டுல இருந்தா. அப்போ, அடுப்பு பற்ற வெச்சு முதல் முதலில் கேசரி செஞ்சு கொடுத்திருக்கா. அதுக்கு, அவங்க மாமியார் பாக்ஸுல போட்டு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்காங்க.

பஞ்சாப்புல எல்லாத்துக்குமே மாப்பிள்ளை வீட்டுல பெண்ணுக்கு இந்தமாதிரி பணம் கொடுப்பாங்களாம். இப்போ, ஹனிமூனுக்கு தாய்லாந்து போயிருக்கா. அப்பவும் மாமியார் ஃபோன் பண்ணி ‘1 லட்ச ரூபாய் பணம் போட்டிருக்கேன். ஏதாவது பர்ச்சேஸ் பண்ணிக்கோம்மா’ன்னு சொல்லியிருக்காங்க. பணத்தை மட்டுமில்ல, குணத்தையும் காட்டுற அந்த குடும்பத்தை அடிச்சுக்கவே முடியல. ரம்யா சித்தப்பா அருண்பாண்டியனுக்கு இந்த திருமணம் நடந்ததுல எங்களைவிட அவருக்கு ரொம்ப சந்தோஷம். ரம்யாவுக்கு செக் கொடுத்து என்ன வேணும்னாலும் வாங்கிக்கோன்னு சொன்னார்.

ரம்யா பாண்டியன் அம்மாவுக்கு கேக் ஊட்டும் லவல் தவான்

ரம்யாவோட அப்பா இறந்ததிலிருந்து எங்க குடும்பத்துக்கு பெரிய சப்போர்ட் அவர்தான். அப்பா இறந்ததுக்கப்புறம் எவ்வளவோ நீங்க கஷ்டப்பட்டுட்டீங்கம்மா, எங்களை நல்லா படிக்க வெச்சிருக்கீங்க, அதனால கல்யாணத்துக்கு உங்களை எந்த சிரமும் படுத்தமாட்டேம்மான்னு சொன்ன ரம்யா, எல்லா செலவுகளையும் அவளும் மாப்பிள்ளையுமே பார்த்துக்கிட்டாங்க. அதுவும் மகள் மாதிரியே மருமகனும் கிடைச்சிருக்காரு. இதைவிட, வேற என்ன சந்தோஷம் வேணும்?” என்கிறார் சந்தோஷ பூரிப்போடு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.