விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்: கோயம்பேட்டில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணி

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதோடு பரபரப்பான சூழல் நிலவியது.

கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்படுகிறது.

இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதற்கான குருபூஜையில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல் தவெக தலைவர் விஜய் வரையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தேமுதிக தலைமை நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

மேலும் மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை பேரணி நடத்தவும் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் விஜயகாந்த் நினைவுநாள் பேரணிக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. வேண்டுமென்றே பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதாக தேமுதிகவினர் குற்றஞ்சாட்டினர்.

தடையை மீறி பேரணி: இருப்பினும் விஜயகாந்த் நினைவிடத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன், மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர் தலைமையில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக போலீஸாருக்கும் தேமுதிகவினருக்கும் இடையே சிறிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி பேரணி நடத்தினால் கட்சியினரை கைது செய்ய பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் கைது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. சிறிய சலசலப்புக்குப் பின்னர் திட்டமிட்டபடி தேமுதிகவினர் பேரணி நடத்தினர். போலீஸார் சூழ பேரணி அமைதியாக நடந்து முடிந்தது.

அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி: தேமுதிக நினைவிடத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் கூட பேரணி அவர்கள் விரும்பியபடியே அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது.

விஜயகாந்தும், அவரது குடும்பத்தினரும், தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் விஜயகாந்த் மீது கொண்டிருக்கும் மாறாத பற்றின் காரணமாக அமைச்சரவையில் இருந்து அரசு சார்பாக என்னை குரு பூஜையில் பங்கேற்க அனுப்பியுள்ளார். நான் விஜயகாந்தின் குடும்பத்தில் ஒருவனாக இந்த குரு பூஜையில் பங்கேற்றுள்ளேன். எனவே அனுமதி மறுக்கப்பட்டதை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்.” என்றார்.

சீமான் அஞ்சலி: முன்னதாக விஜயகாந்த் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “சினிமா துறையில் வாய்ப்புகளை தேடி வந்த பலருக்கும் வாழ்வு கொடுத்தவர் விஜயகாந்த். அவரால் வாழ்ந்தவர் பலர். அவரால் வீழ்ந்தவர் யாருமில்லை.” என்று நினைவு கூர்ந்தார். மேலும், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது தேவையற்றது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து திரையுலகினர், அரசியல் கட்சியினர், தேமுதிக தொண்டர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குவியும் கூட்டத்தால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.