30+ நாளாக உண்ணாவிரதம்: தல்லேவாலை டிச.31-க்குள் மருத்துவமனையில் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று பஞ்சாப் அரசுக்கு கெடு விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கில் நவம்பர் 26-ம் தேதி முதல் கனவுரி எல்லையில் ஜக்ஜித் சிங் தல்லேவால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங், “அவர் (தல்லேவால்) ஐவி ட்ரிப்ஸ் உட்பட அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் ஏற்க மறுத்து வருகிறார். இது அவரது நோக்கத்துக்கான காரணத்தை குறைத்து மதிப்பிட வைக்கும். நிபுணர்கள் குழு ஒன்று போராட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்று தல்லேவாலை மருத்துமனைக்கு மாற்றவும், மருத்துவ உதவிகளைப் பெறவும் அழுத்தம் தரலாம்” என்று நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள் அமர்வு, “பஞ்சாப் அரசு நிலைமையை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை, தல்லேவாலை மருத்துமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்காத விவசாய தலைவர்கள் தற்கொலைக்குத் தூண்டும் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள். தல்லேவால் தனது சகாக்களின் ஒருவிதமான அழுத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்காதவர்கள், அவரின் நலம் விரும்பிகளாக இருக்க முடியாது. அவர்கள் (விவசாயத் தலைவர்கள்) தல்லேவாலின் வாழ்க்கையில் அக்கறை கொண்டுள்ளார்களா அல்லது வேறு ஏதாவது திட்டத்தில் உள்ளார்களா? நாங்கள் அதிகம் சொல்ல விரும்பவில்லை. பஞ்சாப் அரசு எங்களின் வழிகாட்டுதலுக்கு இணங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்து.

முன்னதாக, தல்லேவாலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், அவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்யுமாறு பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. தல்லேவாலுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக பஞ்சாப் அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் மீதான நீதிமன்ற அவமதிப்பு மனு தொடர்பாக அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.