BB TAMIL 8 DAY 82: `காதல்' மொமென்ட்ஸ், மகேஷின் எழுச்சியுரை… யார் எடுப்பார் பணப்பெட்டியை?!

குடும்பச் சந்திப்பு முடிந்து நண்பர்களின் சந்திப்பு இந்த எபிசோடில் துவங்கியது. (இன்னும் அக்கம் பக்கத்து வீட்ல இருந்து யாராவது இருக்கீங்களா?!) இது காதலர்களின் சந்திப்பாகவும் மாறியது. சவுந்தர்யா நிகழ்த்திய ‘திடீர்’ லவ் பிரபோசல் க்யூட்டாக இருந்தது. அதே சமயத்தில் அன்ஷிதா குறிப்பிட்டது போல் கிரிஞ்ச் ஆகவும் இருந்தது. 

தனது வாழ்க்கையின் முக்கியமானதொரு முடிவை இப்படியொரு சமயத்தில்தான் எடுத்தாக வேண்டுமா? அல்லது இதெல்லாம் ஏற்கெனவே எழுதப்பட்ட நாடகமா? அந்தரங்கமான தருணங்களை வெளிச்சம் போட்டு சோஷியல் மீடியாவில் பெருமை(?) கொள்ளும் தலைமுறையினரின் குணாதிசயத்தை இங்கும் பார்க்க முடிகிறது. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 82

விஷ்ணு வருவது முன்பே தெரியுமோ என்னமோ? ‘தேவதையைக் கண்டேன்’ பாடலை காலையிலேயே ஜெப்ரி பாடிக் கொண்டிருக்க ‘அவன் வெளில நின்னு ஃபீல் பண்ணுவான்’ என்று சிணுங்கினார் சவுந்தர்யா. விஷால் மற்றும் பவித்ராவின் நண்பர்கள் வந்தார்கள். ஷியமந்தா மற்றும் நேஹா. இருவரின் அறிவுரைகளும் சிறப்பாக இருந்தன. இன்டர்கட்டில் இரு காட்சிகளையும் மாற்றி மாற்றி காண்பித்தார் பிக் பாஸ். 

BBTAMIL 8: DAY 82

“என்னா உன் பிரச்சினை?” என்று பவித்ராவிடம் அவரது தோழி விசாரணையை ஆரம்பிக்க, அதுதான் சாக்கென்று ‘கோ’வென்று கதறி அழுதார் பவித்ரா. “எது என் கேரக்டர்ன்னு தெரியல. என்னை மாத்திக்கணும். என் கிட்ட என்ன தப்பு.. எனக்குன்னு யாருமே இங்க இல்ல. என்னை மீறி அழுதுடறேன்” என்றெல்லாம் பவித்ரா கண்கலங்கியதை டைட் குளோசப்பில் சென்று காமிரா ஆசையாக பார்த்தது. “உன்னோட ஆட்டம் ஃபர்பக்ட்டா இருக்கு. ஒரு பிரச்னையும் இல்ல. என்னவொண்ணு செய்யறதை வெளில சொல்ல மாட்டேன்ற. பண்றது கிலோ மீட்டர் கணக்குல இருக்கு. ஆனா வெளில சொல்றது ஒரு மில்லி மீட்டர்தான் இருக்கு. மத்தபடி ஓகே” என்ற ஷியமந்தா, “உன் உள்ளுணர்வு சரியாவே வேலை செய்யுது. தள்ளியே இரு. மறுபடியும் பேச ஆரம்பிச்சிடாதே” என்று சொல்ல காமிரா ராணவ்வை காட்டியது. (என்னவொரு வில்லத்தனம்?!) 

இன்னொரு பக்கம் விஷாலை அமர வைத்து அவர் சொல்வதையெல்லாம் பொறுமையாக கேட்டு விட்டு நேஹா கொடுத்த அட்வைஸ் கச்சிதமாக இருந்தது. அவர் சொன்னதில் இரண்டு முக்கியமான விஷயங்கள் இருந்தன. 

சவுந்தர்யா பற்றி  விஷால் அடித்த கமெண்ட். “டீக்கடைல பேசறா மாதிரி இங்க பேச முடியாது” என்று விசேவும் இதைப் பற்றி மறைமுகமாக எச்சரிக்கை தந்திருந்தார். இதை மறுபடியும் தோண்டினால் அது விஷாலுக்குத்தான் டேமேஜ் ஆகும். என்றாலும் எதற்கு மன்னிப்பு என்பதை சம்பந்தப்பட்டவரிடம் தெளிவாகச் சொல்லி விடுவதுதான் சிறந்தது என்று நேஹா சொன்ன உபதேசம் நேர்மையானது. 

BBTAMIL 8: DAY 82

அதே போல் தர்ஷிகா லவ் டிராக் விஷயத்தில் “நான் தெளிவாத்தான் இருந்தேன். அதை அவங்க கிட்ட சொல்லிட்டேன்” என்று என்னதான் விஷால் மழுப்பினாலும் “நாமளும் ஸ்பேஸ் கொடுத்திருக்கக்கூடாது இல்லையா.. எதுவா இருந்தாலும் வெளில போய்ப் பார்த்துக்கலாம்ன்னு தள்ளி நின்னிருக்கணும்” என்று நேஹா சொன்னதும் கிளியரான மெசேஜ். 

தோழி உபதேசத்தின்படி சவுந்தர்யாவிடம் சென்று நேரடியாக மன்னிப்பு கேட்டார் விஷால். அவரும் அதை பெருந்தன்மையாக கடந்து சென்றது நன்று.  பவித்ராவிடம் பேசி அவரை சமாதானப்படுத்திய ஷியமந்தா, வெளியே வந்து மஞ்சரியிடம் கறாராக ஒரு பிரச்னையை சுட்டிக் காட்டினார். முட்டை டாஸ்க்கில் பவித்ராவின் பொறுமையை மஞ்சரி கிரெடிட் எடுத்துக் கொண்டது தொடர்பான விஷயம் இது. “பவித்ரா எவ்வளவு ஸ்ட்ராங் என்பதுதான் இதன் மூலம் வெளியானது’ என்றுதான் நான் சொன்னேன்’ என்று மஞ்சரி பிறகு தெளிவுப்படுத்தினார்.  பிறகு விருந்தினர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.

சவுந்தர்யாவின் ‘லவ்’ பிரபோசல் – க்யூட்டா.. கிரிஞ்சா? 

‘வெளிப்படையா பேசு’ என்று தோழி உபதேசம் செய்ததால் உசுப்பேறியிருந்த பவித்ரா, ஜாக்குலினிடம் ஒரு பிரச்னையை சுட்டிக் காட்டி அழுத்தமாக வாதிட்டுக் கொண்டிருந்தார்.  பாட்டம் 3 விஷயத்தில் ஜாக்குலின் மாற்றி மாற்றிப் பேசுகிறார் என்கிற சர்ச்சை. ஜாக் அதற்கு விளக்கம் அளித்ததோடு இது ஓய்ந்தது. 

‘நட்புக்கு வயதில்லை’ என்கிற பாடல் ஒலிக்க, சவுந்தர்யாவிடம் ஸ்பெஷல் கண்ணீர் வந்தது. முந்தைய சீசன் போட்டியாளர் விஷ்ணுவும், ‘சிங்கம்’ என்கிற அடைமொழி கொண்டிருக்கும் இயக்குநர் வெங்கட்ராஜூம் உள்ளே வந்தார்கள். ஒரே துறையில் பணியாற்றுகிறவர்கள் என்பதைத் தாண்டி வெங்கட்டிற்கும் தீபக்கிற்கும் உள்ள ஆழமான பிணைப்பை இந்தச் சமயத்தில் காண முடிந்தது. அவரைப் பார்த்ததும் தீபக் கண்ணீர் விட்டு கட்டியணைத்துக் கொண்டு பிறகு வெங்கட் தந்த அறிவுரைகளை ஏற்றுக் கொண்டார். 

BBTAMIL 8: DAY 82

உற்சாகப் புயலாக உள்ளே வந்த விஷ்ணு, சவுந்தர்யா – ஜாக் கூட்டணியிடம் “என்னா உங்க பஞ்சாயத்து. ஒண்ணுமே இல்லாத விஷயம்” என்று  சமரசம் செய்து வைத்தார். “நீங்க நெனக்கறா மாதிரி ஒண்ணுமே இல்ல. கூல் ப்ரோ. ஃபேமிலி பார்க்கற விதம் வேற. ஆடியன்ஸ் பார்க்கற விதம் வேற” என்று ரயானுக்கு ஊக்கமான வார்த்தைகளைத் தந்தார்.  “ஆட்டம் ஏறத்தாழ முடிஞ்சிடுச்சு. இனிமே புதுசா நீங்க காட்ட ஒண்ணுமில்ல. இறுதிக்கட்டத்திற்கு தயார் ஆகுங்க” என்று பொதுவான அட்வைஸை அனைவருக்கும் தந்தார். 

“எல்லாம் ஓகே. ஆனா கிரியேட்டிவ்வா ஏதாவது பண்ணுங்க.. அப்பத்தானே ஆடியன்ஸிற்கு எண்டர்டெயினிங்கா இருக்கும்” என்று வெங்கட்ராஜ் சொன்ன சரியான அறிவுரையில் ‘இயக்குநர்’ வெளியே வந்தார்.  “எல்லா ஆடும் ஒரு பக்கம் போறப்ப, ஒரு ஆடு மட்டும் வேற திசைல போகும். அப்பத்தானே அதை எல்லோரும் பார்ப்பாங்க?”என்று சவுந்தர்யாவின் காலை வாரினார் விஷ்ணு. சவுண்டுதான் டைட்டில் வின்னராம். ரியலா இருக்காங்களாம். இந்த ஷோவின் சிறந்த பரிசாம். இப்படியெல்லாம் விஷ்ணுவின் புகழாரங்கள் அமைந்தன. “என்னை விடவும் நீ பெட்டர் பிளேயர்” என்று சவுந்தர்யாவிடம் பாசத்தைப் பொழிந்தார் விஷ்ணு. 

BBTAMIL 8: DAY 82

‘மொழி’ திரைப்படத்தின் காட்சி மாதிரி அப்போதுதான் சவுந்தர்யாவிற்குள் மண்டைக்குள் விளக்கு எரிந்தது. பக்கத்தில் மணி அடித்தது. காற்று பலமாக அடித்தது. அல்லது இவையெல்லாம் ஏற்கெனவே நிகழ்ந்தவையா என்று தெரியவில்லை. விஷ்ணுவிடம் தன்னுடைய காதலை இப்போது வெளிப்படுத்த துணிந்து விட்டார். 

காமிராவிடம் ஆசிர்வாதம் வாங்கிய சவுந்தர்யா

“பெரியவங்க கிட்ட சொல்லாம செய்யறது தப்பு” என்று ஜெப்ரி சொன்ன அறிவுரையைத் தொடர்ந்து, காமிரா முன்பாக வந்த சவுந்தர்யா, “விஷ்ணுவை ஏற்கெனவே பிடிக்கும். உங்க கிட்ட சொல்லியிருக்கேன். நீங்க நேரா வந்தப்பவே சொல்லியிருக்கணும். நெர்வஸா இருக்கு. மனசுல இருக்கறதை சொல்லப் போறேன். உங்க ஆசிர்வாதம் வேணும்” என்று காமிராவையே தந்தையாக நினைத்து சம்மதம் பெற்றுக் கொண்டார். பின்குறிப்பாக வடிவேலு பாணியில் ‘அவ்வ்வ்வ்வ்’ என்று வாயை வைத்துக் கொள்வது சவுந்தர்யாவின் ஸ்டைல். 

சவுந்தர்யாவின் பிரபோசல் சடங்கிற்கு வீடே ஒன்றுகூடி உதவி செய்தது. கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த விஷ்ணுவை கார்டன் ஏரியாவிற்கு தனியாக அழைத்துச் சென்றார் அருண். ‘Marry Me?’ என்பதை முந்திரியால் வடிவமைத்திருந்தார்கள். (காஸ்ட்லியான புரொவிஷன்ல செஞ்சிருக்கோம் – விஷால்). மணமகளை சுற்றத்தார் வழிநடத்திக் கொண்டு வர ‘ஐயோ.. பதட்டமா இருக்கே’ என்றபடி கிளுகிளுப்பும் சஸ்பென்ஸூமாக வந்தார் சவுண்டு. 

BBTAMIL 8: DAY 82

‘சவுந்தர்யாவிற்கு ஒரு முரண்பாடு இருக்காம்” என்று விஷால் கமெண்ட் அடிக்க “அது உடன்பாடு” என்று முத்து திருத்தியது சுவாரசியமான காட்சி. சடாரென்று மண்டியிட்டு தட்டை விஷ்ணுவிடம் நீட்டினார் சவுண்டு. “இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியலையே..”என்று அசடு வழிந்த விஷ்ணு “ரொம்ப நன்றி. சவுண்டை எனக்கு பிடிக்கும். எனக்காக நின்னிருக்கா.. எனக்கு ஓகேதான்” என்று சம்மதம் கொடுக்க வீடெங்கும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. 

சவுந்தர்யாவின் ஆடைகளை எல்லாம் அவரது வீட்டில் கலெக்ட் செய்து பிக் பாஸ் டீமிடம் தருவது விஷ்ணுவின் திருச்சேவை போலிருக்கிறது. “நீ பாட்டுக்கு சொல்லிட்டே. அடுத்த முறை பார்த்தா உங்க அப்பா என்னை செருப்பால அடிப்பார் போலிருக்கே.. பிக் பாஸ்.. இதையெல்லாம் எடிட் பண்ணிடுங்க” என்று ஜாலியாக கமெண்ட் அடித்தார் விஷ்ணு. “இதுக்கெல்லாம் டைவர்ட் ஆகாம விளையாடு” என்று உபதேசமும் தந்தார்.  பிறகு விஷ்ணுவும் வெங்கட்டும் விடைபெற்றுச் சென்றார்கள். ‘கிரிஞ்சா இருந்தாலும் க்யூட்’ என்று சவுந்தர்யாவின் பிரபோசலை ரத்தினச் சுருக்கமாக வர்ணித்தார் அன்ஷிதா. 

நீங்கள் அடுத்து கேட்கவிருக்கும் பாடல் அர்ச்சனாவின் என்ட்ரிக்கானது. அதுவரை ஆஸ்பிட்டல் நோயாளி லுக்கில் இருந்த அருணின் கண்களில் புதிதாக பிரகாசம் தெரிந்தது. அர்ச்சனாவும் ஈரோடு மகேஷூம் நுழைந்தார்கள். அருணை நோக்கி குழந்தையின் சிணுங்கலுடன் ஓடிச் சென்று கட்டிக் கொண்டார் அர்ச்சனா. “நான் முத்து மஞ்சரிக்காக மட்டும் வந்தேன்னு நெனச்சுக்காதீங்க. எல்லோருக்காகவும் வந்தேன். அருணுக்கு ஸ்பெஷல் கெஸ்ட்’ என்றார் மகேஷ். 

கேப்டன் கிரீடத்தை அர்ச்சனாவிற்கு அணிவித்து அழகு பார்த்தார் அருண். “எண்பது நாளைக்கு மேல இருந்து பெட்ல ஜெயிச்சிட்டீங்க” என்று பாராட்டினார் அர்ச்சனா. “ஒரு ஷூட்டிங்  இருக்கு. அதுக்கு முன்னாடி இங்க ஆசிர்வாதம் வாங்க வந்தேன். நீங்கதான் என் லக்கி சார்ம்” என்று சீரியல் மருமகள் பாணியில் அருணின் காலில் விழுந்து வணங்கினார் அர்ச்சனா. (பார்றா!) “இந்த வீடு என்னோட பார்வைகளை மாத்தியிருக்கு” என்று பரவசப்பட்டார் அருண். 

BBTAMIL 8: DAY 82

கடந்த சீசனின் வெற்றியாளரிடம் “எனி அட்வைஸ்?” என்று அருண் கேட்க “இப்ப இருக்கறது நல்லாயிருக்கு. Fun வேணும்.. கோவம் வேணாம்.. உங்க மேலயே சந்தேகப்படாதீங்க” என்ற அர்ச்சனா, வைஸ் பிரின்ஸிபல் டாஸ்க்கில் வர்ஷினிக்கும் அருணிற்கும் நடந்த விஷயம் பற்றி பொசசிவ் பாவனையுடன் சிணுங்கியது ரசிக்கத்தக்க காட்சி. “தீபக்தான் என்னை அதிகமாக ஆச்சரியமூட்டினார். இவ்ள நாள் இருப்பார்ன்னு நெனக்கல” என்று பாராட்டினார் மகேஷ். 

தனது ஹார்லி க்வீனை அதிகாரபூர்வமாக பொதுவில் அறிவித்தார் அருண். உற்சாகக் கூச்சல்கள் வீடெங்கும் ஒலித்தன. வந்த விருந்தினர்களை வைத்து விஷாலும் ஜெப்ரியும் பாடிய பாடல் சுவாரசியமான வரிகளைக் கொண்டதாக இருந்தது. பிறகு அர்ச்சனாவிற்குள் இருந்த பாடகி பீறிட்டு வெளியே வந்தார். ‘இந்த காதல் பொல்லாதது’ என்கிற பாடலை கூடவே ஜெப்ரியும் பாடினார்.

‘பிக் பாஸ்ன்றது லைஃப் டைம் சிலபஸ்’ – மகேஷ் எழுச்சியுரை

இந்தப் பேச்சாளர்களிடம் உள்ள பிரச்னை என்னவென்றால், ஏரியாவில் நுழைவதற்கு முன்பே என்ன பேச வேண்டும் என்பதை கோர்வையாக மனதில் வரைந்து கொள்வார்கள். அது உத்வேகமூட்டுவதாகவும் இருக்கும். அதே சமயத்தில் யதார்த்தத்தில் இருந்து விலகி சற்று செயற்கையாகவும் இருக்கும். ஈரோடு மகேஷின் உரை அப்படித்தான் இருந்தது. “தயங்கியவர்கள் எப்போதும் தகுதியான இடத்தை அடைந்ததில்லை. எதற்கும் தயங்காதீர்கள். நதி தன் பாதையை தானே தீர்மானித்துக் கொள்ளும். இது ‘வேற லெவல்’ ஷோ. பிக் பாஸ்ன்றது லைஃப் டைம் சிலபஸ் மாதிரி. அடுத்தவன் பேப்பரை எட்டிப் பார்க்காதீங்க. உங்களுக்குத் தரப்பட்ட கொஸ்டின் பேப்பருக்கு நேர்மையா விடை எழுதுங்க” என்று மகேஷ் ஆற்றிய எழுச்சியுரை காரணமாக போட்டியாளர்கள் உற்சாகம் அடைந்தனர். ‘நல்ல வேளை!. இவர் போட்டியாளரா  உள்ளே வரலை’ என்று முத்துவின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம். 

BBTAMIL 8: DAY 82

“உங்களுக்கு நியூஸ் ரீடர் குரல் இருக்கு” என்று மஞ்சரியிடம் சொன்ன அர்ச்சனா பிறகு எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டார். ‘அச்சு.. ஐ மிஸ் யூ’ என்று பிக் பாஸ் விச்சுவும் பாசத்தைப் பொழிந்தார். ‘அர்ச்சனா ஐ லவ் யூ’ என்று வெட்கப்பட்டுக் கொண்டே உரத்த குரலில் சொல்லி வழியனுப்பி வைத்தார் அருண். “என்னைத்தாண்டா எவனும் லவ் பண்ணலை” என்று அனத்திக் கொண்டே வெளியே சென்றார் மகேஷ். 

ஆக.. இனிமேலும் விருந்தினர் வர வாய்ப்பில்லை. சாலையில் செல்கிற எவராவது தெரியாமல் உள்ளே நுழைந்தால்தான் உண்டு.  உறவுகளையும் சுற்றத்தையும் கண்டு மகிழ்ந்த திருப்தியோடு போட்டியாளர்கள் அடுத்த டாப்பிக்கைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அது ‘பணப்பெட்டி’. 

இந்த விஷயத்தை முத்து மற்றவர்களிடம் போட்டு வாங்குவதற்காக ஆரம்பித்தார் என்று தோன்றுகிறது. டைட்டில் வெறி கொண்டவர்கள் பணம் வேண்டாம் என்றுதான் உறுதியாக சொல்வார்கள். இந்த விடைக்கு வாயை விட்டு விட்டால் பிறகு நடக்கும் விவாதத்தில் மாட்டிக் கொள்ள வாய்ப்புண்டு. 

‘இது கற்பனைதான்’ என்று சொல்லி தன்னுடைய ரேட்டை 25 லட்சத்திற்கு ஆரம்பித்தார் முத்து. 45 லட்சத்தில் துவங்கி 17 லட்சத்திற்கு வந்தார் தீபக். ‘அது என் நம்பராச்சே?” என்று சிணுங்கிய சவுந்தர்யா பிறகு 15 லட்சத்திற்கு ஒப்புக் கொண்டார். ஜாக் 12.5 லட்சம் என்று கிஃப்ட் டாக்ஸ் போக கணக்கு சொன்னார். அன்ஷிதா 15, ஜெப்ரி 16, பவித்ரா 20 என்று கணக்கு நீண்டது. 

BBTAMIL 8: DAY 82

“இந்த ராணவ் 3 லட்சத்தைப் பார்த்தா கூட எடுத்துட்டு ஓடிடுவான். ஆர்வக் கோளாறு” என்று புறணி பேசினார்கள். கிச்சானாலே இளிச்சவாயன்தான். “எதுவா இருந்தாலும் சூதானமாக நின்னு ஆடணும்” என்று பேசிக் கொண்டார்கள். எனக்கென்னமோ ஜாக்குலின்தான் பெட்டியைத் தூக்குவார் என்று உள்ளுக்குள் பட்சி சொல்கிறது. பார்க்கலாம். 

பவித்ராவிற்கு வியட்நாம் சுற்றுலா செல்வதற்கான அதிர்ஷ்டம் அடித்தது. “விஷ்ணுவை எப்படி செலக்ட் பண்ணே?” என்று நண்பர்கள் கேட்க “he is a good soul.  உதவுகிற மனப்பான்மை அதிகம். அனிமல்ஸ் -ன்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார் சவுண்டு. ‘அதான் உன்னை பிடிச்சுதா?” என்று நல்ல வேளையாக ரயான் ஜோக் அடிக்கவில்லை. 

இன்று விசாரணை நாள். விசே என்ன மூடில் வரப் போகிறாரோ? விருந்தினர் வருகை வாரம் என்பதால் சர்ச்சை, சண்டை எதுவுமில்லை. எப்படி எபிசோடை சுவாரசியமாக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.