IND vs AUS: இது நடந்தால் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது உறுதி… WTC பைனலுக்கு வாய்ப்பில்லை

India National Cricket Team Latest Updates: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில், பிரம்மாண்டமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியும் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 474 ரன்களை குவித்த நிலையில், இந்தியாவும் நேற்றும் இன்றும் தொடர்ந்து பேட்டிங் செய்து 358 ரன்களை எடுத்துள்ளது. இருப்பினும் கையில் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது. இன்னும் 116 ரன்கள் இந்திய அணி பின்தங்கியிருக்கும் நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி 105 ரன்களையும், சிராஜ் 2 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.

சொதப்பும் இந்திய வீரர்கள்

நிதிஷ் குமார் ரெட்டியை அடுத்து அதிகபட்சமாக இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 82 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள், விராட் கோலி 36 ரன்களை எடுத்தனர். மற்ற அனைவருமே பெரியளவில் சொதப்பினர் எனலாம். கேஎல் ராகுல் சிறப்பான பார்மில் இருந்தாலும் அவரும் இந்த இன்னிங்ஸில் சொதப்பினார். ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோரும் பெரியளவில் சோபிக்காததால் இந்திய அணி பின்னடைவில் இருக்கிறது.

ஓய்வை நெருங்கும் ரோஹித் சர்மா

இந்திய அணியின் பேட்டிங்கில் மேலும் ஒரு பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்றால், கேப்டன் ரோஹித் சர்மாதான். பேட்டிங்கில் மட்டுமின்றி கேப்டன்ஸியிலும் ரோஹித் சர்மா தற்போது பின்தங்கியிருப்பதால் ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஒதுங்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன. ஒருவேளை இந்த மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தால் நிச்சயம் ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

ஒருவேளை நான்காவது போட்டியில் தோல்வியடைந்தால், 5ஆவது போட்டியை வென்றால் மட்டுமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் தகுதிபெற முடியும். எனவே, இந்திய அணியில் ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடவில்லை என்றால் சுப்மன் கில் டாப் ஆர்டருக்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை பேட்டிங் ஆர்டர் பலமாக இருக்கிறது என்றால் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதுதான் முக்கிய காரணம்?

அடுத்த போட்டியில் வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா சென்றாலும் இனி ரோஹித் சர்மா அணியில் நீடிப்பது அவசியமற்றது. ஓப்பனிங்கில் கேஎல் ராகுல் வலுவான இடத்தை பதித்துவிட்டார். WTC இறுதிப்போட்டியும் இங்கிலாந்தில்தான் நடைபெறும். எனவே, ரோஹித்தின் இடம் அதிலும் கேள்விக்குள்ளாகும். அடுத்த WTC சுழற்சி தொடங்க இன்னும் 6 மாதங்கள் ஆகும். எனவே, ரோஹித் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதே நல்லதாகும்.

ஒருவேளை இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு அதிகமாகும். இருப்பினும் அடுத்த போட்டிக்கு பின்னர் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு தேவைப்பட மாட்டார். அந்த வகையில், ரோஹித் சர்மா இந்த தொடருடன் டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவிப்பதும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் ஓடிஐயில் இருந்து ஓய்வை அறிவிப்பதுமே ரோஹித் இந்திய அணிக்கு செய்யும் நல்ல காரியம் என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.