அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இதையடுத்து, ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு, விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இக்குழுவினர் அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட பெண், அவரது குடும்பத்தினருடன் ஆலோசித்து உண்மையை கண்டறிய உள்ளனர். இதையொட்டி, குழு உறுப்பினர்கள் நாளை (டிச.30) சென்னைக்கு வரவுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.