ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புத்தாண்டு உற்சாகம் இப்போதே தொடங்கிவிட்டது. 2024-க்கு விடைகொடுத்து 2025-ஐ வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு, ஆயுதப்படை, குற்றப்பிரிவு, போக்குவரத்து, சிறப்பு பிரிவு என 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதன் விபரம்: கடற்கரைகள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதுமான அளவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். சாலை விபத்துகனை தடுக்க வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். குற்றம் இழைத்திருந்தால், தேவை ஏற்படின் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம். பெண்கள் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் எங்கு ஏற்பாடு செய்யப்பட்டாலும் ஏற்பாட்டாளர்களால் அனைத்து சட்ட அனுமதிகளும் பெறப்பட்டிருக்கிறதா என விசாரணை மேற்கொள்ள வேண்டும். வாகன பந்தயங்களை தடுக்கவும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு உத்தரவுகளை டிஜிபி பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை காவல் ஆணையர் அருண் மேற்கொண்டுள்ளார். முக்கியமாக மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை உட்பட பொதுமக்கள் அதிகளவில் கூடும் கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீஸார் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 1,500 ஊர்க்காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகர் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களிடம் அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க சாதாரண உடையணிந்த பெண்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.