சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி அறிவித்த திட்டங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு மகிளா சம்மன் யோஜனா திட்டத்தை ஆம் ஆத்மி அறிவித்தது. இத்திட்டத்தில் பெண் பயனாளிகளுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கான முகாம்கள் இப்போதே நடத்தப்படுவதாகவும், இதற்காக பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதாக டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித், துணை நிலை ஆளுநர் சக்சேனாவிடம் புகார் அளித்தார்.
‘‘ஆம் ஆத்மி அறிவித்துள்ள மகிளா சம்மன் யோஜனா மற்றும் சஞ்சீவானி யோஜனா போன்ற திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்கள் யாரும் தங்களின் தனிப்பட்ட விவரங்களை, அங்கீகாரமற்ற நபர்களிடம் வழங்க வேண்டாம்’’ என டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் திக்ஷீத் புகார் அளித்தார். மேலும் அவர், டெல்லி தேர்தல் நடவடிக்கைகளுக்காக பஞ்சாப்பிலிருந்து பணம் கொண்டுவரப்படுவதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகள் அருகே பஞ்சாப் உளவுத்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் புகார் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி தலைமை செயலாளர், காவல் ஆணையர் ஆகியோர் விசாரணை நடத்த துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் குறித்து ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: ஆம் ஆத்மி மீதான் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. தேர்தலில் பாஜக வென்றால் மகிளா சம்மன் திட்டம், சஞ்சீவானி திட்டம், இலவச மின்சாரம், இலவச கல்வி ஆகியவற்றை நிறுத்துவர். தேர்தலில் வென்ற பிறகு பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்குவோம், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்போம் என வாக்குறுதி அளித்துள்ளோம். இரண்டுமே மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள். இத்திட்டத்தில் இணைய லட்சக்கணக்கான மக்கள் ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர். இது பாஜக.,வுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் குண்டர்கள், பின்னர் போலீசாரை அனுப்பி முன்பதிவு முகாம்களை அகற்றினர். தற்போது போலி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தேர்தலில் வென்றால் அமல்படுத்துவோம் என்றுதான் நாங்கள் அறிவித்தோம். இதில் அவர்கள் என்ன விசாரிக்கப்போகின்றனர்? இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.