Latest Cricket News: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றியை பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இது இந்திய அணிக்கு எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்பதை இங்கு காணலாம்.
கிரிக்கெட் உலகமே தற்போது பரபரப்பாக கட்டத்தில் இருக்கிறது எனலாம். கடந்த நான்கு நாள்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கேட்டால் காலை 4.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணிவரை ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியையும், மதியம் 1.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியையும் தொடர்ந்து பார்த்து வந்தனர்.
அந்தளவிற்கு கிரிக்கெட்டில் தற்போது டெஸ்ட் சீசன் உச்சத்தில் இருக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா தொடரில் இன்னும் 1 போட்டியும், தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் தொடரில் இன்னும் 1 போட்டியும், ஜனவரி – பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியா – இலங்கை தொடரில் இரண்டு போட்டிகளும் என மொத்தம் 4 போட்டிகள் மட்டுமே இந்த சீசனில் இன்னும் மீதம் இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட் சீசன் நிறைவடைய உள்ளது.
எனவே, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் இருந்து வந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டி பந்தயத்தில் இருந்த நிலையில், தற்போது முதல் அணியாக WTC இறுதிப்போட்டிக்கும் தென்னாப்பிரிக்கா தகுதிபெற்றுள்ளது. பாகிஸ்தான் உடனான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக WTC இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.