இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக குலு பகுதியில் சிக்கித் தவித்த 5,000 சுற்றுலாப் பயணிகளை போலீஸார் மீட்டனர்.
இதுகுறித்து குலு காவல் துறை வெளியிட்ட எக்ஸ்பதிவில் ” இமாச்சலின் குலுவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக சோலங் நல்லா என்ற இடத்தில் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் பனியில் சிக்கிக்கொண்டன. இந்த வாகனங்களில் இருந்த 5,000 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது வாகனங்களும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் அலையின் தாக்கம் இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதனால், குடியிருப்புவாசிகள், சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் ஐஎம்டி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பனியால் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இமாச்சலின் லஹவுல்-ஸ்பிட்டி, சம்பா, கங்ரா, குலு, சிம்லா, கின்னவுர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.