சென்னை: இ சேவை மையம் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஓய்வூதிய விதிகளின்படி, கடந்த 1998-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர் ஒவ்வொருவரும் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் சமர்ப்பித்து வருகின்றனர்.
அவர்கள் மூத்த குடிமக்கள் என்பதால் ஆயுள் சான்றிதழை அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த பகுதியில் உள்ள இசேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம் என ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி அறக்கட்டளை அறிவித்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை இ சேவை மையத்திலோ, பணிமனைகளில் நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.
இ சேவை மையத்தில் சமர்ப்பிக்கும்போது, ஓய்வூதிய ஆணை படிவம், வங்கி புத்தகம், ஆதார் அட்டை, புகைப்படம், செல்போன் எண் ஆகியவற்றை எடுத்துச் சென்று, டிஎன்எஸ் 103 இணைய முகப்பில் பதிவு செய்யுமாறு கோர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.