உ.பி.யில் ரொட்டி பரிமாற தாமதம் ஆனதால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ரொட்டி பரிமாற தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மணமகன் திருமணத்தையே நிறுத்திய வினோதமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தவுலி மாவட்டம் ஹமித்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மெஹ்தாப். இவருக்கு டிசம்பர் 22-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணமகன் வீட்டார் அனைவரும் அன்று மகிழ்ச்சியுடன் ஒன்று கூடினர். ஆனால், அந்த மகிழ்ச்சி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. மணமகன் உறவினர்களுக்கு ரொட்டி பரிமாறுவதில் பெண் வீட்டார் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமைடந்த மணமகன் வீட்டார் பெண் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதனால், விரக்தியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டு வேறொரு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதைக்கண்டு பெண் வீட்டார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மணமகனுக்கு வரதட்சணையாக கொடுத்த ரூ.1.5 லட்சம் உட்பட கல்யாணத்துக்கு செலவு செய்த ரூ.7 லட்சத்தை மணமகன் வீட்டார் திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பெண்ணின் உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, 5 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் விசாரணை துரிதப்படுத்தியுள்ளனர்.

வரதட்சணைத் தடைச் சட்டம் 1961-ன் படி வரதட்சணை கொடுப்பவர், வாங்குபவர் அல்லது அதற்கு உதவியாக இருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000 அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.