இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இதுவரை தோனியின் தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளனர். ஐபிஎல் 2023ல் தோனி தலைமையில் வென்ற சென்னை அணி, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையில் பிளே ஆப்களுக்கு செல்ல தவறியது. இதனால் ஐபிஎல் 2025ல் ஆறாவது பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் நல்ல வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது சிஎஸ்கே. எம்எஸ் தோனி அன்கேப்ட் வீரராக தக்கவைக்கப்பட்டாலும், பல இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். அவர்களில் ஐபிஎல் 2025ல் சிறப்பாக விளையாட கூடிய வீரர்களை பற்றி பார்ப்போம்.
சிஎஸ்கே வீரர்கள்:
ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா 2012 முதல் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். ஆல்ரவுண்டராக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். தனது சிறப்பான பவுலிங் மூலம் எதிரணியை காலி செய்துள்ளார் ஜடேஜா. சென்னை அணி ஐபிஎல் 2023 கோப்பையை வெல்ல ஜடேஜா தான் காரணம். இதுவரை 240 ஐபிஎல் போட்டிகளில் 2,959 ரன்கள் மற்றும் 160 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜடேஜா 2025ல் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருப்பார்.
ஷிவம் துபே
சிஎஸ்கே அணிக்கு வந்ததில் இருந்து புதிய ஒரு வீரராக மாறி உள்ளார் ஷிவம் துபே. மிடில் ஆர்டரில் ஷிவம் துபே மேட்ச் வின்னராக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். குறிப்பாக ஸ்பின்னர்களை அவர் கையாளும் விதம் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கிறது. துபே இதுவரை 65 ஐபிஎல் போட்டிகளில் 9 அரை சதங்கள் உட்பட 1,502 ரன்கள் அடித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் 2025ல் சென்னை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் ஒருவராக உள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட்
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது அசாத்திய திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். 2024ல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை 66 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 18 அரை சதங்கள் உட்பட 2,380 ரன்கள் அடித்துள்ளார். ஐபிஎல் 2025ல் சென்னை அணி மீண்டும் கோப்பையை வெல்ல அதிகம் உழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதீஷா பத்திரனா
சென்னை அணி ஐபிஎல் 2023ல் கோப்பையை வெல்ல முக்கிய வீரர்களில் ஒருவர் மதீஷா பத்திரனா. சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு தாக்குதலில் முக்கிய வீரராக மாறி உள்ளார். மேலும் ஐபிஎல்லில் தன்னை சிறந்த டெத் பவுலராக நிலைநிறுத்திக் கொண்டார். ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு சென்னை அணியால் 13 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார் பத்திரனா. இதுவரை 20 ஐபிஎல் போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெவோன் கான்வே
ஐபிஎல் 2023 பைனலில் டெவோன் கான்வேவின் அதிரடி ஆட்டம் அணிக்கு கைகொடுத்தது. ஐபிஎல் 2024ல் காயம் காரணமாக முழு சீஸனும் விளையாடவில்லை. இவை சென்னை அணி அதிகம் மிஸ் செய்தது. சமீபத்தில் நடந்த இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார் கான்வே. இதுவரை 23 ஐபிஎல் போட்டிகளில் 9 அரை சதங்களுடன் 924 ரன்கள் குவித்துள்ளார்.