புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு குறித்த காங்கிரஸின் குற்றத்தை மறுத்துள்ள மத்திய இணை அமைச்சர் ஹர்தீப் புரி சிங், இதில் காங்கிரஸ் கேவலமான அரசியலை செய்வதாக குற்றம்சாட்டினார்.
இரண்டு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் மாண்புக்கு அரசு அவமரியாதை செய்துவிட்டது. ராஜ்காட்க்கு பதிலாக அவரது உடலை நிகம்போத் காட்-டில் வைத்து அரசு தகனம் செய்தது என்று ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “இதில் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஆனால் முரண்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. காங்கிரஸ் கேவலமான அரசியலை செய்கிறது.
இறுதிச் சடங்கு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி இருந்தார். மத்திய உள்துறை அமைச்சகம் அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அறிக்கை வெளியிட்டது. மன்மோகன் சிங் மறைந்த அடுத்த நாள் நள்ளிரவில் தான் அக்கடிதம் எங்கள் கைக்கு கிடைத்தது.
ராஜ்காட்டை சுற்றியுள்ள பகுதிகள் சமதளமாகவும், தண்ணீர் தேங்கும் நிலையிலும் உள்ளன. அன்று டெல்லிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த குறுகிய காலத்தில் அனைத்துக்குமான விஷயங்களை எழுப்ப முடியுமா என்று காங்கிரஸ் கட்சியிடம் கேளுங்கள். அமைச்சகம் அதன் கட்டுப்பாடுகளுக்குள் அனைத்தையும் செய்தது.
இதே காங்கிரஸ் கட்சி, கடந்த காலத்தில் அதன் சொந்தத் தலைவரையே அவமதித்தது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் அஸ்தியை காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கும் கொண்டவர அனுமதிப்படவில்லை. அவரது இறுதிச் சடங்குகள் ஹைதராபாத்தில் நடந்தன.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவருக்குத் தெரியமாலேயே சீனா சென்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கையெழுத்திட்டது. இரண்டு முறை பிரதமராக மன்மோகன் சிங் தனது பணியினை நிறைவு செய்த போது காங்கிரசின் இளவரசர் அவரது பணிநிறைவு விழாவுக்கு வரவில்லை. இப்போதும் அவரது அஸ்தி கரைக்கப்பட்டபோது பாஜகவினர் இருந்தனர். காங்கிரஸார் இல்லை.
மன்மோகன் சிங்கின் பணியை நாங்கள் பாராட்டுகிறோம். அவரிடமிருந்து உத்வேகம் பெற்றுள்ளோம். அவரது நினைவாக கண்டிப்பாக நினைவகம் கட்டப்படும். சர்ச்சையை உருவாக்குபவர்களை அனுமதிக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். நாம் துக்கம் கடைபிடிக்க வேண்டும். அவரது பாரம்பரியத்தை மதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் சீக்கிய பிரதமர் மற்றும் இந்திய பொருளாதார மறுமலர்ச்சியின் சிற்பியாக இருந்த மன்மோகன் சிங்கின் பூத உடல் டெல்லியின் நிகாம்போத் காட்டில் முழு அரசு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.