சித்தராமையா மீது ஊழல் புகார் அளித்த சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது ஊழல் புகார் அளித்த சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா லோக் ஆயுக்தா நீதிபதியிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர்கள் 2 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் சித்தராமையா அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித் ஷா உள்ளிட்டோருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சித்தராமையா மீது நிலமோசடி புகாரை அளித்ததில் இருந்து கர்நாடக போலீஸார் என் மீது 2 பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பழைய வழக்குகளை தோண்டியடுத்து என்னை சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர்.

சித்தராமையா மீது எவ்வித புகாரும் அளிக்கக்கூடாது. இதுவரை தொடுத்த வழக்குகளை திரும்ப பெறுமாறு போலீஸார் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். பல்வேறு நெருக்கடியை சமாளித்து எனது சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறேன். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தொலைப்பேசி வாயிலாகவும், கடிதம் வாயிலாகவும் பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.

இதன்படி எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு மைசூரு காவல் ஆணையரிடம் முறையிட்டேன். ஆனால் இதுவரை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா மூலமாக எனக்கு பாதுகாப்புக்கோரி கர்நாடக டிஜிபி அலோக் மோகனிடம் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

கர்நாடக அரசு எனக்கு பாதுகாப்பு வழங்க மறுப்பதால், மத்திய அரசு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதனை அவசர கோரிக்கையாக கருதி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிநேகமயி கிருஷ்ணா கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.