நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 43 லட்சம் செக்-பவுன்ஸ் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளதாவது:
நடப்பாண்டு டிசம்பர் 18-ம் தேதி நிலவரப்படி நாடு தழுவிய அளவில் பல்வேறு நீதிமன்றங்களில் 43 லட்சம் செக்-பவுன்ஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 6.4 லட்சம் வழக்குகளுடன் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்தியா முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையில் வழக்குகள் தேங்குவதற்கு ட்ராபிக் சலான்கள் மற்றும் செக்-பவுன்ஸ் வழக்குகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதனால், டிராபிக் சலான் வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்கள் மூலமாக தீர்வு காணும் நடைமுறையை அரசு தொடங்கியுள்ளது. இருப்பினும், செக்-பவுன்ஸ் வழக்குகள் வழக்கமான நீதிமன்ற அமர்வுகளில் சாட்சியப் பதிவு மற்றும் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகளின் தன்மையைக் கொண்டு தீர்க்கப்படுகின்றன.
விசாரணை கண்காணிப்பில் குறைபாடு, அடிக்கடி வழக்குகள் ஒத்திவைக்கப்படுவது, கால வரம்பு நிர்ணயிக்கப்படாதது ஆகியவற்றின் காரணமாக செக்-பவுன்ஸ் வழக்குகளில் தீர்வு காண்பதற்கு மிகவும் தாமதம் ஏற்படுகிறது.
இவைதவிர, பிரத்யேக உள்கட்டமைப்பு, போதுமான நீதிமன்ற ஊழியர்கள் இல்லாதது மற்றும் சம்பந்தப்பட்ட உண்மைகளின் சிக்கலான தன்மை உள்ளிட்டவற்றாலும் நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இவ்வாறு மேக்வால் தெரிவித்துள்ளார்.