பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவம் மோதல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலீபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.

மேலும் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்த ஆப்கானிய அகதிகளை அரசாங்கம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இதனால் இரு நாடுகளின் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து இரு நாட்டு வீரர்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர். அதன்படி கடந்த 24-ந் தேதி ஆப்கானிஸ்தானின் பாக்டியா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்கு பதிலடியாக எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ சாவடிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் தீயிட்டு கொளுத்தியது. அதன்படி பாக்டியா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் உள்ள ராணுவ சாவடிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தலீபான்கள் அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 19 ராணுவ வீரர்கள் பலியாகினர். அதேபோல் ஆப்கானிஸ்தானின் டான்ட்-இ-படான் நகரில் பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பதிலடியானது ஆப்கானிஸ்தான் தரப்பில் “பெரும் இழப்புகளை” ஏற்படுத்தியது என்றும், “பாகிஸ்தான் ராணுவத்தின் எதிர்தாக்குதல் காரணமாக 13 TTP மற்றும் ஆப்கானிஸ்தான் தலீபான் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவங்களால் இரு நாடுகளின் எல்லையில் போர்ப்பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள எல்லைப்புற கார்ப்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகே ஒரு தற்கொலை குண்டுடன் வந்த நபர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வெடிக்கச் செய்ததில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று (டிசம்பர் 28, 2024) நடந்தது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டேங்க் மாவட்டத்தில் உள்ள கனோரி போஸ்ட்டை அடைவதற்குள் வாகனம் இடைமறிக்கப்பட்டது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் மாகாணத்திற்கும் இடையே எல்லைப் படைகளுக்கு இடையே ஒரே இரவில் கனரக ஆயுதங்கள் உட்பட ஆங்காங்கே சண்டைகள் வெடித்ததாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் “பயங்கரவாதிகளின் மறைவிடங்களை” குறிவைத்ததாக பாகிஸ்தானின் மூத்த பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.