பாமக உட்கட்சிப் பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேசத் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
புதுச்சேரி அருகே பட்டானூரில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இளைஞரணித் தலைவராக முகுந்தனை நிறுவனர் ராமதாஸ் அறிவித்தபோது, மேடையிலிருந்த கட்சித் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இருவரிடையே நடைபெற்ற காரசார விவாதம் அரசியல் களத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், பாமக ஊடகப் பிரிவு இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதுடன், இளைஞரணித் தலைவர் பொறுப்பை தான் ஏற்கவில்லை என முகுந்தன் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸ் மற்றும் அன்புமணியுடன் சமரச முயற்சி மேற்கொண்டனர்.
தைலாபுரத்துக்கு நேற்று காலை வந்த அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் ராமதாஸை சந்தித்துப் பேசினர். பின்னர், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தனியாகப் பேசினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அன்புமணி கூறும்போது, “கட்சி வளர்ச்சி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது, சித்திரை முழு நிலவு மாநாடு, 10.5 சதவீத இடஒதுக்கீடு போன்றவை குறித்து பேசினோம். பாமக ஜனநாயகக் கட்சி. அதனால், பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது இயல்புதான். இது உட்கட்சிப் பிரச்சினை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உட்கட்சிப் பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச வேண்டிய அவசியமில்லை” என்றார். அதேநேரத்தில், முகுந்தன் நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அன்புமணி பதில் அளிக்கவில்லை.