புரோ கபடி கோப்பையை வெல்வது யார்? அரியானா – பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை

புனே,

12 அணிகள் பங்கேற்ற 11-வது புரோ கபடி லீக் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி தொடங்கிய இந்த கபடி திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி புனேவில் இன்று அரங்கேறுகிறது.

ஜெய்தீப் தலைமையிலான அரியானா ஸ்டீலர்ஸ் லீக் முடிவில் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் அரையிறுதியில் உ.பி. யோத்தாசை தோற்கடித்து வீறுநடை போடுகிறது. அந்த அணியில் வினய், ஷிவம் படாரே, ராகுல் சேத்பால் நல்ல நிலையில் உள்ளனர். அங்கித் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணியில் தேவாங்க், அயன் ரைடில் கலக்கி வருகின்றனர். வெளியேற்றுதல் சுற்றில் மும்பையையும், அரையிறுதியில் டெல்லியையும் விரட்டியடித்த பாட்னா அதே உத்வேகத்துடன் களம் காணும்.

இருப்பினும் இவ்விரு அணிகள் மோதிய இரு லீக்கிலும் அரியானாவே வெற்றி பெற்றது. இதனால் அரியானா வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். கடந்த முறை இறுதி ஆட்டத்தில் புனேரி பால்டனிடம் கோட்டை விட்ட அரியானா இந்த தடவை முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்துவதில் தீவிர முனைப்பு காட்டும்.

அதே சமயம் பாட்னா அணி லீக்கில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து 4-வது முறையாக கோப்பையை வசப்படுத்த வரிந்து கட்டும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.8 கோடி கிடைக்கும். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிப்பரப்பு செய்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.