முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிட விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்க கூடாது என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்படும் இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கோரியுள்ளார். இதுகுறித்து கேபினட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மற்றும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது மன்மோகனுக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக புதிதாக அறக்கட்டளை அமைக்கப்படும். இதற்கு காலஅவகாசம் தேவைப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மற்றும் மன்மோகன் குடும்பத்தினரிடம் அமைச்சர் அமித் ஷா எடுத்து கூறினார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டு உள்ளது. இதேபோல மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்படும் இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு சார்பில் இன்னமும் நிலம் ஒதுக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டின.
பாஜக செய்தித் தொடர்பாளர் கேசவன் கூறும்போது, “முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் உடலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்ககூட அந்த கட்சி அனுமதி வழங்கவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசு அவருக்கு நினைவிடம்கூட அமைக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் மன்மோகனின் நினைவிட விவகாரத்தில் காங்கிரஸ் அநாகரிக அரசியலில் ஈடுபடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். மன்மோகன் வாழ்ந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி அவருக்கு உரிய மரியாதை வழங்கவில்லை. அவரது உயிரிழப்புக்கு பிறகும் அதே நிலை நீடிக்கிறது.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, காங்கிரஸ் தலைமை எவ்வாறு நடத்தியது என்பது குறித்து அவரது மகள் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். காங்கிரஸின் வரலாற்று தவறுகளை மக்கள் மறக்கவில்லை. இவ்வாறு பாஜக தலைமை தெரிவித்துள்ளது.