சென்னை: மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையர்கள் சினேக பிரியா (சென்னை அண்ணா நகர்), ஐமான் ஜமால் (ஆவடி), பிருந்தா (சேலம்) ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த எஃப்ஐஆர், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள் ஆகியவை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று விசாரணையை தொடங்கினர். ஞானசேகரனின் செல்போனில் இருந்த வீடியோக்கள், எஃப்ஐஆர் தகவல் கசிந்தது, அதை 14 பேர் பார்வையிட்டது ஆகியவை தொடர்பாகவும் விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக் ஷித் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு இன்று விசாரணையை தொடங்க உள்ளது.