மெல்போர்ன் டெஸ்ட் : இந்திய அணி வெற்றி பெறுமா? இதுவரை அதிகபட்ச சேஸ் இதுதான்..!

India vs Australia 4th Test | இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்னும் ஒருநாள் ஆட்டம், அதாவது 5வது நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. நாளை  நடைபெறும் 5வது நாள் ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்திய அணியின் பேட்டிங் மட்டும் சிறப்பாக இருந்துவிட்டால் வெற்றியை உறுதியாகவும் பெற முடியும். ஆஸ்திரேலிய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

நாளை நடைபெறும் 5வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பேட்டிங் விளையாட உள்ளது. ஒருவேளை இந்திய அணி அந்த அணியின் கடைசி விக்கெட்டை சீக்கிரம் எடுத்துவிட்டால் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கலாம். அப்படியான சூழலில் இந்திய பேட்ஸ்மேன்கள் பிற்பகல் டீ பிரேக் வரை மிதமான ஆட்டத்தை ஆடிவிட்டு, கடைசி 20 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கும் வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணிக்கு மிக முக்கியமாக தேவை. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணியை இந்த டெஸ்ட் போட்டி மற்றும் 5வது கடைசி டெஸ்ட் போட்டியிலும் வீழ்த்தியே ஆக வேண்டும். அப்படியான சூழலில் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை சமனில் முடித்தால் கூட, அடுத்ததாக அந்த அணி இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அந்த அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். 

மெல்போர்ன் மைதானத்தில் சேஸிங் சாத்தியமா?

அதனால், ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் போட்டி வெற்றி மிக முக்கியம் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மெல்போர்ன் மைதானத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 332 ரன்கள் மட்டுமே சேஸிங் செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் 1928 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சேஸிங் செய்திருக்கிறது. அண்மைக்காலத்தில் பார்க்கும்போது, 2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்த மைதானத்தில் 183 ரன்களை சேஸ் செய்திருக்கிறது. மற்றபடி மிகப்பெரிய ரன் சேஸ்கள் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கவில்லை. அதனால், நாளை மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா நிர்ணயிக்கும் வெற்றி இலக்கை சேஸிங் செய்தால் அது வரலாற்று வெற்றியாகவும் இந்திய அணிக்கு இருக்கும். 

மெல்போர்னில் டாப்-5 வெற்றிகரமான ரன் சேஸ்கள்

1928- இங்கிலாந்து எதிராக ஆஸ்திரேலியா- 332/7
1895- இங்கிலாந்து எதிராக ஆஸ்திரேலியா- 298/4
1953- தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா- 297/4
1929- ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து- 287/5
1908- இங்கிலாந்து எதிராக ஆஸ்திரேலியா- 282/9

இந்திய அணியின் சாதனை

பார்டர்-கவாஸ்கர் டிராபி வரலாற்றில் 19 முறை வெற்றிகரமான ரன் சேஸ்கள் நடந்துள்ளன. இந்தியா இதை 12 முறை செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில், இந்தியா 200 ரன்களுக்கு மேல் இரண்டு முறையும், 300 க்கு மேல் ஒரு முறையும் இலக்கை எட்டியுள்ளது. 2021 ஜனவரியில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா 328 ரன்கள் இலக்கை எட்டியது. பார்டர்-கவாஸ்கர் கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத வெற்றிகரமான ரன் சேஸ் இதுவாகும். 2003ல், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் முதல் இன்னிங்சில் ராகுல் டிராவிட்டின் இரட்டைச் சதத்திற்குப் பிறகு இந்தியா 230 ரன்கள் இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.