கோட்டா: ராஜஸ்தானின் கோட்டாவில் ஐஐடி – ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பயற்சி மையங்களில் தற்கொலை சொய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோட்டா மாவட்ட ஆட்சியர் ரவிந்திர கோஸ்வாமி கூறுகையில், “கடந்த 2023-ம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் பயிற்சி மையங்களில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இது தொடர் முயற்சிகளால் பெறப்பட்ட குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையாகும். இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
‘டின்னர் வித் கலெக்டர்’,‘சம்வாத்’ போன்ற பயிற்சி மைய மாணவர்களுடன் தொடர்ந்து நடந்தப்பட்ட உரையாடல்களும் அதேபோல் பெண்கள் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்காக செயல்படுத்தப்பட்ட காளிகா படை போன்ற திட்டங்களும் இந்த மாற்றத்துக்கு வழிவகுத்தன. ‘டின்னர் வித் கலெக்டர்’ மற்றும் ‘சம்வாத்’ நிகழ்ச்சிகளின் மூலம் இந்த ஆண்டில் 25,000 மாணவர்களுடன் உரையாடியுள்ளோம்.
பயிற்சி பெறும் மாணவர்களின் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதற்காக கோட்டா கேர்ஸ் என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த நகரம் பயற்சி அளித்து, அவர்களின் வாழ்வு மேம்பட பங்களித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாகும்.
அதேபோல், இந்த நகரத்தின் பயிற்சி மையங்களில் படித்த முன்னாள் மாணவர்களை, தற்போது படித்து வரும் மாணவர்களுடன் உரையாட வாய்ப்பு ஏற்படுத்துவதும், அவர்களுக்கு தற்போது சிறந்த வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது என்பதை உணர்த்துவதும் இதில் அடங்கும். மாணவர்களின் ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் பாதுக்காப்புக்கு கோட்ட முழு அர்ப்பணிப்புடன் இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, தரவுகளின் அடிப்படையில், 2024-ம் ஆண்டு பயிற்சி மையங்களில் 17 மாணவர்களின் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன, கடந்த 2023-ம் ஆண்டு இதுபோல 26 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு காரணம் மாவட்ட நிர்வாகத்தின் தீவிர கண்காணிப்பில், பயற்சி மையங்கள் மற்றும் விடுதிகள் வழிகாட்டுதல்களை கடைபிடித்து வருவதேயாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளின் படி, விடுதி கண்காணிப்பாளர்களுக்கு கேட் கீப்பர் பயிற்சி வழங்கியது, ‘எஸ்ஓஎஸ்’ உதவி சேவை போன்ற பிற காரணிகளும் தற்கொலை எண்ணிக்கைகள் குறைவதற்கு பங்களிப்பு செய்துள்ளன.
என்றாலும், மாணவர்களின் தற்கொலை, பயிற்சி மையங்கள் மற்றும் விடுதிகளை ஒழுங்குபடுத்தும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள், பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட பயிற்சி மையங்களின் பிராண்டுகள் போன்ற எதிர்மறையான காரணங்களால் கோட்டாவில் பயிற்சி பெற வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பயிற்சி மையம் நடத்தி வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.