ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? மௌனம் கலைத்த பிசிசிஐ

Rohit Sharma Retirement Latest Update: மெல்போர்னில் நடைபெற்று வரும் 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணித்தலைவர் வெறும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா தொடர்ந்து மோசமான பார்மில் இருக்கிறார். அவரது சமீபத்திய செயல்திறனை அடுத்து, அவர் ஓய்வு பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளது. பார்டர்-கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு ரோஹித் சர்மா ஓய்வு பெறுவார் என்று சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. வாருங்கள்.. உண்மை என்னவென்று பார்ப்போம்.

ரோஹித் சர்மா ஓய்வு பற்றிய ஊகங்கள் -பிசிசிஐ விளக்கம்

ரோஹித் சர்மா ஓய்வு குறித்து எழுந்துள்ள ஊகங்களுக்கு பிசிசிஐ பதில் அளித்துள்ளது. ஒரு மூத்த பிசிசிஐ அதிகாரி, இன்சைட் ஸ்போர்ட்ஸிடம் (தொழில்முறை ஊடக தளம்) பேசுகையில், “ஓய்வு பற்றி ரோஹித்துடன் எந்தவித பேச்சும் நடக்கவில்லை. அத்தகைய கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகள். மேலும் வதந்திகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை. இதுபோன்ற ஊகங்களை நாங்கள் கேட்பது இது முதல் முறை அல்ல. அவர் ஒரு கடினமான கட்டத்தில் பயணம் செய்கிறார். ஆனால் அவர் ஓய்வு பெறுவாரா இல்லையா என்பது முற்றிலும் அவரைப் பொறுத்தது. இதைப் பற்றி ரோஹித்திடம் இருந்து நாங்கள் எதுவும் கேட்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்” எனக்கூறி ரோஹித் சர்மா ஓய்வு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார். 

கடினமான கட்டத்தில் ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா தற்போது தனது கேரியரில் கடினமான கட்டத்தை சந்தித்து வருகிறார். அவரது கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸைப் பார்த்தால், ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடிக்கப்பட்டு உள்ளது. இந்த இன்னிங்ஸில், ரோஹித்தின் ஸ்கோர்கள்: 3, 10, 6, 3, 11, 18, 8, 0, 52, மற்றும் 2. மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர் 03 ரன்களில் ஆட்டமிழந்தார். அதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் 4 இன்னிங்ஸ்களில் 22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் 

ரோஹித் சர்மா பேட்டிங்கின் ஃபார்ம் குறித்து பார்த்தால், கடைசி 14 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா எடுத்த ரன்கள் 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3 ஆகும். 

மொத்த ரன்கள்: 155
சராசரி: 11.07

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வரலாறு

ரோஹித் சர்மா தனது வாழ்க்கையில் 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 114 இன்னிங்ஸ்களில் 41.24 சராசரியில் 4,289 ரன்கள் குவித்துள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் 12 சதங்கள் மற்றும் 18 அரை சதங்கள் அடித்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 212 ரன்கள் ஆகும். ரோஹித் 2013-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்மில் வர வேண்டும்

ரோஹித் சர்மா தனது பேட்டிங் நிலையை குறித்து தெளிவாக மறுபரிசீலனை செய்து தனது ஃபார்மை மீண்டும் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.