மும்பை,
மராட்டியத்தின் பர்பானி மாவட்டத்தில் கங்காகேத் நாகா என்ற பகுதியில் வசித்து வருபவர் குந்த்லிக் உத்தம் காலே (வயது 32). இவருடைய மனைவி மெய்னா. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், 3-வது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்துள்ளது. இதனால், மனைவி மீது உத்தம் காலே ஆத்திரத்தில் இருந்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி இதுபற்றி சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவில் தம்பதிக்கு இடையே இதுபற்றி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் மனைவி மீது உத்தம் காலே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில், அந்த பெண் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். சுற்றியிருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.
ஆனால், சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் பற்றி மெய்னாவின் சகோதரி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காலேவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.