ஆண், பெண் பாலின பாகுபாடு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும், மனைவி தொடர்ச்சியாக பெண் குழந்தை பெற்றால் அவர் மீது கணவன் கோபப்படுவது, வீட்டை விட்டு துரத்துவது போன்ற சம்பவங்களும் இன்றுவரை நடந்துகொண்டிருப்பது வேதனையானது.
மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை கணவன் உயிரோடு எரித்துக்கொலை செய்துள்ளார். பர்பானி அருகில் உள்ள கங்காகேட் என்ற இடத்தில் வசிப்பவர் உத்தம் காலே(32). இவரது மனைவிக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், மூன்றாவதாக சமீபத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனால், தனது மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த உத்தம் காலே, இதற்காக அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு இதே போன்று கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த உத்தம் காலே தனது மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டார். அவரது மனைவி அலறியடித்துக்கொண்டு உதவி கேட்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடி வந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். அதனால் இறந்து போன பெண்ணின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உத்தம் காலேயை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த வாரம் தான் புனேயில் இரண்டு மைனர் சிறுமிகள் தண்ணீர் டிரம்மிற்குள் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டனர்.