உலகின் மிக உயரமான 7 சிகரங்களில் ஏறி மும்பை சிறுமி சாதனை

உலகின் மிக உயரமான 7 சிகரங்களில் ஏறி மும்பையைச் சேர்ந்த சிறுமி சாதனை படைத்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த கார்த்திகேயன் இந்திய கடற்படையில் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் காம்யா கார்த்திகேயன் (17), மும்பை கடற்படை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே மலை ஏறுவதில் ஆர்வம் காட்டினார். இவர் முதல் முறையாக தனது 7-வது வயதில் உத்தராகண்டில் உள்ள ஒரு மலையில் ஏறினார்.

இவர் தனது 16-வது வயதில் உலகிலேயே உயரமான, ஆசியா கண்டத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து, தென் அமெரிக்கா (அகோன்காகுவா), வடஅமெரிக்கா (டெனாலி), ஆப்ரிக்கா (கிளிமஞ்சாரோ), ஐரோப்பா (எல்பிரஸ்), ஆஸ்திரேலி யா (கோஸ்ஸியூஸ்கோ) ஆகிய கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறினார். இறுதியாக, காம்யா தனது தந்தையுடன் கடந்த 24-ம் தேதி அன்டார்டிகா கண்டத்தில் உள்ள வின்சென்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். இதன்மூலம் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறியவர் என்ற சாதனையை படைத்துள்ளார் காம்யா.

இதுகுறித்து, இந்திய கடற்படையின் எக்ஸ் தளத்தில், “மும்பை கடற்படை பள்ளியில் படிக்கும் காம்யா கார்த்திகேயன், உலகின் 7 மிக உயரமான சிகரங்களில் ஏறிய இளம்பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கும் அவருடைய தந்தைக்கும் வாழ்த்துகள்” என கூறப்பட்டுள்ளது.

மும்பை கடற்படை பள்ளியின் எக்ஸ் தளத்தில், “காம்யா கார்த்திகேயன் தடைகளை உடைத்து புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் எங்கள் பள்ளிக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்” என பதிவிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.