எகிப்து: தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சுற்றுலா பயணி சுறா தாக்கியதில் பலி

கெய்ரோ,

எகிப்து நாட்டில் மார்சா ஆலம் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடல் பகுதியானது பவள பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பீச் ஆகியவற்றுக்காக புகழ் பெற்றது.

இந்நிலையில், இந்த பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளில் ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் என கூறப்படுகிறது. இதில், அவரை சுறா ஒன்று தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் பலியானார்.

இதுபற்றி அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், வடக்கு மார்சா ஆலம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சுற்றுலா பயணி நுழைந்து உள்ளார். நீச்சலடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறி சென்ற அவர் ஆழ்கடல் பகுதிக்குள் சென்றபோது, சுறா தாக்குதலுக்கு ஆளானார் என இன்று தெரிவித்து உள்ளது.

எனினும், அவர் எந்த நாட்டை சேர்ந்த நபர் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு செல்ல நாளை (திங்கட்கிழமை) முதல் 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூனில் மார்சா ஆலம் கடலோர பகுதிக்கு வடக்கே அமைந்த செங்கடல் பகுதியில் ஹர்காடா என்ற இடத்தில் ரஷிய நாட்டு சுற்றுலா பயணி ஒருவரை புலி சுறா தாக்கியது. இதில் அவர் பலியானார். கடந்த மாதம் அதே பகுதியில், சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காணாமல் போனார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.