மகாராஷ்டிராவில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் பா.ஜ.கவைச் சேர்ந்த நிதேஷ் ரானே. முதல் முறையாக அமைச்சராகி இருக்கும் நிதேஷ் ரானே சமீப காலமாக இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வருகிறார்.
பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகனான நிதேஷ் ரானே, புனே அருகில் உள்ள சஸ்வாட் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். அப்சல் கானை சத்ரபதி சிவாஜி மகாராஜ் தோற்கடித்த தினத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் நிதேஷ் ரானே கலந்து கொண்டு பேசுகையில், “கேரளாவைச் சேர்ந்த இந்து ஆர்வலர்கள் 12 ஆயிரம் இந்துப் பெண்களைப் பாதுகாத்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த இவர்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
கேரளா ஒரு மினி பாகிஸ்தான். அதனால் தான் ராகுல் காந்தியும், அவரது சகோதரியும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனைத்து தீவிரவாதிகளும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். தீவிரவாதிகளின் ஆதரவால்தான் இவர்கள் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற மத விழாக்களுக்குக் கொடுக்கப்படும் சுதந்திரம் இந்து மதத்திற்கும் கொடுக்கப்படவேண்டும்.
சட்டத்திற்குப் புறம்பாக யாரேனும் ஒருவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு தொலைப்பேசி அழைப்பு மூலம் அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்களுக்குக் காண்பிக்கும். இந்துத்துவா தொண்டர்கள் தனியாட்கள் கிடையாது. அவர்களுடன் அரசாங்கமாகிய நாங்கள் இருக்கிறோம்.
மகாராஷ்டிராவில் இந்துத்துவா முதல்வர் இருக்கிறார். எனவே நீங்கள் (இந்து ஆர்வலர்கள்) கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. இந்துக்கள் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக யாராவது செயல்பட்டால் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம்” என்றார்.
நிதேஷ் ரானேயின் செயல்பாடு குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அதுல் லோண்டே, வெறுப்பையும் ஆதாரமற்ற தகவலையும் பரப்புகிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…