சிம்ம ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

சிம்மத்தில் பிறந்த நீங்கள், தன்னம்பிக்கை மிகுந்தவர். முன் வைத்தக் காலைப் பின்வைக்காமல் வெற்றிகரமாக காரியஜெயம் காண்பதில் வல்லவர் நீங்கள். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் –  25 குறிப்புகள் இங்கே! 

1. உங்கள் ராசிக்கு சந்திரன் 5-ம் வீட்டில் நிற்கும்போது, 2025 புத்தாண்டு பிறக்கிறது. அடிப்படை வசதி – வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள். புதிய சிந்தனைகள் உதயமாகும்.

2. வருங்காலத் திட்டங்கள் பலவும் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

3. பிள்ளைகளால் உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள்.

4. தடைப்பட்டிருந்த கட்டட வேலைகளை தொடங் குவீர்கள். அதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர், பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.

5. வருடம் தொடங்கும்போது செவ்வாய் 12-ம் வீட்டில் நிற்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும் டென்ஷனும் இருக்கும். என்றாலும் அவர்களால் ஆதாயமும் உண்டு.

சிம்மம்

6. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம். நிதானத்துடன் யோசித்து முடிவெடுக்கவும். வழக்கறிஞர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுங்கள்.

7. சனி 7-ல் நின்று கண்டகச் சனியாகத் திகழும் நிலையில், கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். வாழ்க்கைத் துணைவருக்கு மருத்துவச்செலவுகள் ஏற்படும்.

8. கவனக்குறைவு மற்றும் மறதியின் காரணமாக விலையுயர்ந்த நகை, பணம், செல்போன் போன்றவற்றை இழக்க நேரிடும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

9. நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்துகொண்டேயிருக்கும். எனினும் சமாளிப்பீர்கள்.

10. ஏப்ரல் 25 வரையிலும் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால், சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனந்தெரியாத கவலைகள் வந்துசெல்லும்.

11. சிலர் உங்கள் வாயைக் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். பார்வைக்கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கணுக்கால் வலி வந்து செல்லும்.

12. ஏப்ரல் 26-க்குப் பிறகு வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

13. சிலருக்குத் திடீர்ப் பயணங்கள் உண்டு. தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். சில காரியங்களைநீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

14. கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும். வாழ்க்கைத் துணைவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வழக்குகளால் நெருக்கடிகள் வந்து நீங்கும். 

15. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 10.5.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால், அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.

சிம்மம்:

16. ஆனால் 11.5.2025 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். 

17.  சிலர், புதுச் சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்கு இடையே பிரச்னைகள் நீங்கி, நகமும் சதையுமாக இணைவீர்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். 

18. மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். தாயாரின் உடல் நிலை சீராகும். 

19. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.

20. வியாபாரிகளே! பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த லாபத்தைக் குறைத்து விற்பனை செய்ய வேண்டியது வரும். வேலையாள்களால் பிரச்னைகள் வரக்கூடும். 

21. புதியவர்களை நம்பி, அறிமுகம் இல்லாத வியாபாரத்தில் இறங்கவேண்டாம். எவருக்கும் பெரிய தொகையைக் கடனாகத் தரவேண்டாம். சிற்சில சிரமங்கள் இருந்தாலும் வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும்.

22. உணவு, புரோக்கரேஜ், கமிஷன், எலெக்ட்ரிக்கல்ஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.

23. உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரியால் அவ்வப்போது மன உளைச்சல் வந்தாலும், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். 

குருப்பெயர்ச்சி சிம்மம்

24. அரசுத்துறையில் பணியாற்றும் அன்பர்கள், வேலையில் சக ஊழியர்களால் உங்களின் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சிலருக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டு. எனினும் வருடத்தின் பிற்பகுதியில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

25. கணினித் துறையினருக்கு வேலைப்பளு அதிகம் உண்டு என்றாலும், புதிய பொறுப்புகளும் ஊதிய உயர்வும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.