‘டெல்லியில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 மதிப்பூதியம்’ – கேஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு மதிப்பூதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கோயில் பூசாரிகள், அர்ச்சகர்கள், குருத்வாராக்களில் பணிபுரியும் கிராந்திஸ் ஆகியோருக்கான மதிப்பூதியம் குறித்த அறிவிப்பை கேஜ்ரிவால் இன்று வெளியிட்டார்.

முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோருடன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜ்ரிவால், “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி மீண்டும் அமைந்ததும் கோயில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்கள், குருத்வாராக்களில் பணிபுரியும் கிராந்திகள் ஆகியோருக்கு மதிப்பூதியமாக மாதம்தோறும் ரூ.18,000 வழங்கப்படும். இது இந்தியாவில் முதல்முறையாக நடக்கிறது. இந்தத் திட்டத்துக்கான பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.31) முதல் தொடங்கும். பாஜகவும் காங்கிரஸும் தங்கள் சொந்த மாநிலங்களில் இதைச் செய்யும் என்று நம்புகிறேன்.

நாளை நான் டெல்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களைப் பதிவு செய்கிறேன். எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் நாளை முதல் அனைத்து கோயில்கள் மற்றும் குருத்வாராக்களில் அர்ச்சகர்களை பதிவு செய்வார்கள். இதற்கு முன் நான் அறிவித்த பெண்களுக்கு மரியாதை திட்டம், சஞ்சீவனி திட்டம் ஆகியவற்றை நிறுத்த முயற்சித்தது போல், அர்ச்சகர்கள் மற்றும் கிராந்திகளுக்கான இந்த திட்டத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டாம் என்று நான் பாஜகவிடம் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

முந்தைய அறிவிப்புகள்: பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.2,100 வழங்கும் பெண்கள் மரியாதை திட்டம், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச மருத்து சேவை அளிக்கும் சஞ்சீவினி திட்டம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு; ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடு; ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்திற்காக ரூ.1 லட்சம் நிதி உதவி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைப் படி ஆண்டுக்கு இருமுறை ரூ. 2,500, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளின் பயிற்சிக்கான செலவை அரசே ஏற்கும் உள்ளிட்ட திட்டங்களை அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல்: 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க கடுமையாக உழைத்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.